சென்னை:””ம.தி.மு.க., அங்கம் வகிக்கும் அணியில் தே.மு.தி.க., இடம் பெறுமா என்பதை கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அ.தி.மு.க., தான் முடிவு செய்ய வேண்டும்.
இரண்டு ஆண்டுகளாக அ.தி.மு.க., அணியில் சேருமாறு எந்த கட்சியையும் நாங்கள் அழைக்கவில்லை,” என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கூறினார்.ம.தி.மு.க., 19வது பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணாநகரில் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற வைகோ, நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் மக்கள் ஆட்சி தொடர்வதா? மாநிலத்தின் மொத்த நலனை பாதுகாப்பதா என்ற இரு கேள்விகளைத்தான் நாங்கள் மக்கள் முன் வைக்கிறோம். ஊழலில் சம்பாதித்த பணத்தில், 1,000 முதல், 5,000 ரூபாய் வரை, வாக்காளர்களுக்கு கொடுத்து ஓட்டுகள் பெற தி.மு.க.,வினர் திட்டமிட்டுள்ளனர்.இப்போதே, பண வினியோகத்தை ஆரம்பித்துவிட்டனர். தி.மு.க., அரசு பொறுப்பேற்ற கடந்த 5 ஆண்டுகளில், 7,783 கொலைகள் நடந்துள்ளன. லோக்சபா தேர்தலில் தி.மு.க.,வினர், 1,200 கோடி ரூபாயை செலவழித்தனர். ஆனால், அ.தி.மு.க., கூட்டணியை விட, 14 லட்சம் ஓட்டுகளைத்தான் அவர்களால் கூடுதலாக பெற முடிந்தது.சுப்ரீம் கோர்ட் கண்டிப்பால், ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ., விசாரணையை துரிதப்படுத்தி இருப்பதாக செய்திகள் வருகின்றன. சி.பி.ஐ., நடுநிலையோடு நடந்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். சுப்ரீம் கோர்ட் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து இவ்வழக்கை கண்காணிக்க வேண்டும்.
இந்த ஊழலில் உண்மையான பலனடைந்த அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். ம.தி.மு.க., அங்கம் வகிக்கும் அணியில் தே.மு.தி.க., இடம் பெறுமா என்பதை கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அ.தி.மு.க., தான் முடிவு செய்ய வேண்டும். இரண்டு ஆண்டுகளாக அ.தி.மு.க., அணியில் சேருமாறு எந்த கட்சிக்கும் அழைப்பு கொடுக்கவில்லை.தொகுதி பங்கீடு முதல் சுற்று பேச்சுவார்த்தை முடிந்திருக்கிறது. எத்தனை தொகுதியில் போட்டியிடுவோம் என்பதை இப்போது கூற முடியாது. நான் போட்டியிடுவது குறித்து கட்சியின் ஆட்சிமன்றக்குழு முடிவு செய்யும்.இவ்வாறு வைகோ கூறினார்.
Leave a Reply