மதுரை: இந்தியாவிலேயே மிகப்பெரிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், மதுரை வெள்ளக்கல்லில் திறக்கப்பட்டது. மேயர் தேன்மொழி துவக்கிவைத்த இத்திட்டம், ரூ.72 கோடி மதிப்புடையது.
கலெக்டர் காமராஜ் பேசுகையில், “”டில்லியில் வெளிநாட்டு பொறியாளரால் நூறாண்டுக்கான திட்டமிடல் மூலம் ரோடு சீரமைக்கப்பட்டது. அத்தகைய தொலைநோக்கு பார்வை எதிலும் வேண்டும். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட ஆரம்பித்தபோது, மதுரையின் பரப்பளவு 51 சதுர கிலோமீட்டர். தற்போது 141 சதுர கிலோமீட்டராக விரிவடைந்துள்ளது. அதற்கேற்ப தொலைநோக்கு எண்ணத்தோடு ரோடு, போக்குவரத்து, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க வேண்டும்,” என்றார்.
மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின், தலைமை பொறியாளர் சக்திவேல் பேசியதாவது: இந்தியாவில் ஆங்கிலேயர் காலத்தில் (1924) அமைக்கப்பட்ட பழமையான சுத்திகரிப்பு நிலையம் இது. மக்கள்தொகைக்கேற்ப விரிவுபடுத்த திட்டமிட்டு 2009ல் துவங்கப்பட்டு, ரூ.72 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டின் தேசிய நதிநீர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம், நகரின் பல்வேறு பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்து, 360 கி.மீ., நீளத்திற்கு பாதாள சாக்கடை குழாய்கள் மூலம் கிட்டத்தட்ட 90 சதவீத பரப்பளவிற்கு செயல்படுத்தப்படுகிறது. அவனியாபுரம் நிலையத்தின் மூலம் நாளொன்றுக்கு 1,250 லட்சம் லி., கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது. மும்பையில் உள்ள நிலையத்தில் 1000 லட்சம் லி., கழிவுநீரே சுத்திகரிக்கப்படுகிறது. இநதியாவில் உள்ள மிகப்பெரிய நிலையம் இது. மேலும் சக்கிமங்கலத்தில் ரூ.36 கோடி செலவில் அமைக்கப்பட்ட நிலையத்தின் மூலம் நாளொன்றுக்கு 457 லட்சம் லி., கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது. இத்தண்ணீரை குடிப்பதை தவிர, மற்ற அனைத்திற்கும் பயன்படுத்தலாம். கழிவுநீரில் மாசு என்பது லட்சத்தில் ஒருபங்காக இருப்பதால், மாசுகட்டுப்பாட்டு வாரியமும் அனுமதி வழங்கியுள்ளது. இன்னும் 30 ஆண்டுகளுக்கு இத்திட்டம் சிறப்பாக செயல்படும். மாநகராட்சி விரிவடையும் போதும், இதற்கேற்ப சுத்திகரிப்பு அளவை அதிகரிக்க முடியும், என்றனர்.
Leave a Reply