புதுடில்லி: “கல்வியை இலவசமாக கற்றுக் கொடுத்தால் மட்டும் போதாது. நாடு முழுவதும் உள்ள ஆரம்ப பள்ளிகளில் குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை வசதியையும் ஏற்படுத்தி தர வேண்டும்’என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
டில்லியைச் சேர்ந்த சுற்றுச் சூழல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு, சில ஆண்டுகளுக்கு முன் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தது. அதில், “டில்லியில் உள்ள ஆரம்ப பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதைச் செய்து தரும்படி, மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும்’என, அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனு, சமீபத்தில் நீதிபதிகள் தல்வீந்தர் பண்டாரி, அசோக் குமார் கங்குலி ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போது கல்வியை அடிப்படை உரிமையாக்கி, சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கல்வியை இலவசமாக கற்றுக் கொடுத்தால் மட்டும் போதாது. மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும்.
டில்லி மாநில அரசு தாக்கல் செய்துள்ள பதிலில், மாநிலத்தில் 937 அரசு பள்ளிகள் இயங்கி வருவதாகவும், அவற்றில் 14 லட்சம் மாணவர்கள் படித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் போதிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வசதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. குடிநீர், கழிப்பறை, சுற்றுச் சுவர், மின்சாரம், மதிய உணவு, போதிய ஆசிரியர்கள் ஆகிய வசதிகள் செய்து தரப்பட வேண்டும். அனைத்து மாவட்ட கலெக்டர்களும் இது தொடர்பாக, பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். நாடு முழுவதும் ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆரம்ப பள்ளிகள் உள்ளன. டில்லி மாநில அரசு செய்து கொடுத்துள்ள வசதிகள் போல, அனைத்து மாநில அரசுகள் வசதிகளை செய்து தர வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Leave a Reply