இஸ்ரோ, தேவாஸ் ஒப்பந்தம்: பிரதமர் விளக்கம் அளிக்க பாஜக வலியுறுத்தல்

posted in: மற்றவை | 0

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவும் தனியார் நிறுவனமான தேவாஸ்சும் ஒப்பந்தம் செய்து கொண்ட விவரத்தை பிரதமர் விளக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

இந்தத் துறை பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதாகும். எனவே எஸ்-பாண்ட் ஒதுக்கீடு தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்து விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு அவருக்குள்ளது என்று பாஜக குறிப்பிட்டது.

2-ஜி அலைக்கற்றை ஊழலைவிட மிகப் பெரியது எஸ்-பாண்ட் ஊழல். இந்த விவகாரம் தொடர்பான பிரச்னையை நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் பாஜக எழுப்ப உள்ளதாக அக்கட்சியின் மக்களவை துணைத் தலைவர் கோபிநாத் முண்டே தெரிவித்தார்.

இந்த விஷயம் குறித்து பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது இந்த விவகாரத்தை அடுத்த வாரம் எழுப்புவது என முடிவு செய்யப்பட்டதாக செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

2-ஜி ஸ்பெக்ட்ரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை (ஜேபிசி) குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக முண்டே கூறினார். ஜேபிசி அமைப்பது குறித்த அறிவிப்பை பிரதமர் வெளியிடுவார் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இது தவிர, காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டில் ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி சங்க ஊழல், விலைவாசி உயர்வு, உள்நாட்டு பாதுகாப்பு, ராணுவத்தில் ரேஷன் பொருள் விநியோகத்தில் ஊழல், வெளிநாடுகளில் போடப்பட்டுள்ள கறுப்புப் பண விவகாரம் உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

அத்துடன் சீன ஊடுருவல், சிபிஐ செயல்பாடு உள்ளிட்ட விஷயங்களை நாடாளுமன்றத்தில் எழுப்புவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது, துன்புறுத்தப்படுவது உள்ளிட்ட விஷயங்களை நாடாளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

சபரிமலையில் ஏற்பட்ட விபத்து, திரங்கா யாத்திரை ஆகியவற்றை அரசின் கவனத்துக்குக் கொண்டு வருவதெனவும், இவை தொடர்பாக சுருக்கமாக விவாதம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக முண்டே கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *