டாக்கா: உலகக் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் தவம் கிடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன.
துவக்க விழா நிகழ்ச்சி, வங்க தேசத் தலைநகர் டாக்காவில் இன்று மாலை 5 மணிக்கு வண்ணமயமாக நடக்கவிருக்கிறது.
10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய ஆசிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. 14 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியின் ஆட்டங்கள் வருகிற 19-ந்தேதி முதல் ஏப்ரல் 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. முதல் போட்டியே, இந்தியா-வங்காளதேச அணிகளுக்கிடையில்தான் நடக்கிறது.
போட்டிகள் நாளை மறுதினம் தொடங்கினாலும், தொடக்க விழா மட்டும் இன்று (வியாழக்கிழமை) வங்க தேச தலைநகர் டாக்காவில் உள்ள பாங்கபந்து தேசிய ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடக்கிறது.
மாலை 5.30 மணிக்கு தொடங்கும் தொடக்க விழா 2 மணி 15 நிமிடங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வங்காளதேசம் சுதந்திரம் அடைந்த பிறகு அங்கு நடைபெறும் முதல் மிகப்பெரிய விளையாட்டு இது தான். எனவே தொடக்க விழாவை மிக பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்களது வித்தியாசமான நடனங்கள் மூலம் பார்வையாளர்களை பரவசப்படுத்துகிறார்கள். போட்டியை நடத்தும் இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளின் கலாச்சாரம், பண்பாட்டை சித்தரிக்கும் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன.
42 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவை வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் (ஐ.சி.சி.) சரத்பவார் மற்றும் கிரிக்கெட் நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள். பிரதமர் மற்றும் ஐ.சி.சி. தலைவர் உரையாற்றிய பிறகு, 14 நாட்டு அணிகளின் கேப்டன்களும் மைதானத்திற்குள் நுழைகிறார்கள். வங்காளதேசத்தின் பாரம்பரிய வாகனமான அலங்கரிக்கப்பட்ட ரிக்ஷாவில் கேப்டன்கள் வலம் வருவார்கள். இது மட்டுமின்றி, பிரபல கலைஞர்களும் கலந்து கொள்கிறார்கள்.
Read: In English
கனடா பாடகர் பிரையன் ஆடம்ஸ் மற்றும் இந்தியாவின் புகழ் பெற்ற பாடகர் சோனு நிகாம் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்றுப் பாடுகிறார்கள். உலக கோப்பை மையநோக்கு பாடலை உருவாக்கிய, இந்திய இசைக்குழுவினர் சங்கர் மகாதேவன், ஈசான் மற்றும் லாய் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
தொடக்க விழாவை மாலை 5.30 மணி முதல் இ.எஸ்.பி.என்., ஸ்டார் கிரிக்கெட், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஆகிய சேனல்களில் நேரடி ஒளிபரப்பாகப் பார்த்து ரசிக்கலாம்!
Leave a Reply