என் மீதான ஊழல் புகார்களை நிரூபித்தால் அரசியல் துறவறம் பூணத் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் கர்நாடக முதல்வர் எதியூரப்பா.
முதல்வர் எதியூரப்பா மீது புதன்கிழமையன்று முன்னாள் பிரதமர் தேவெ கெளடாவின் மகன் எச்.டி.ரேவண்ணா புதிய ஊழல் புகாரைச் சுமத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில், முதல்வர் எதியூரப்பாவும், அவரது குடும்ப உறுப்பினர்களும் ஷிமோகா மாவட்டத்தில், ரூ. 1000 கோடி மதிப்புக்கு பினாமி பெயர்களில் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனர் என்று கூறியிருந்தார்.
இதை நேற்று மறுத்தார் எதியூரப்பா. இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ரேவண்ணாவுக்கு 24 மணி நேர அவகாசம் தருகிறேன். அதற்குள் அவர் என் மீதான புகார்களுக்குரிய ஆதாரங்களைத் தர வேண்டும். அப்படித் தந்தால் நான் முதல்வர் பதவியிலிருந்து விலகத் தயார். அரசியல் துறவறம் பூணவும் தயார்.
நானோ எனது குடும்பத்தினரோ பினாமி பெயர்களில் நிலம் வாங்கிக் குவிக்கவில்லை. இந்த புகார்கள் பொய்யானவை, ஆதாரமற்றவை, மக்களை திசை திருப்பக் கூறப்பட்டுள்ளவை. ரேவண்ணாவிடம் ஆதாரம் இருந்தால் லோகாயுக்தா கோர்ட்டிலோ அல்லது என்னிடமோ வந்து கொடுக்கட்டும்.
நான் கெளடாவையும், அவரைச் சேர்ந்தவர்களையும் கேட்டுக் கொள்வது என்னவென்றால், இன்னும் இரண்டரை ஆண்டு பொறுமையாக இருங்கள். பிறகு தேர்தலில் மக்களை சந்தியுங்கள். யார் வீட்டுக்குப் போக வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்.
எப்படி எதிர்க்கட்சி எம்.எல்.ஏவாக செயல்பட வேண்டும் என்பது காங்கிரஸுக்குத் தெரியவில்லை. அவர்கள் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க இன்னும் 15-20 வருடம் காத்திருக்க வேண்டியதுதான் என்றார் எதியூரப்பா.
Leave a Reply