புவனேஸ்வர்: ஒடிசாவில் கடத்தப்பட்ட கலெக்டர் விடுவிக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதலி்ல் கேட்டுக்கொண்டதற்கிணங்க 5 பேரை விடுதலை செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதற்கிடையில் கூடுதலாக சிலரையும் விடுவிக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனையால் கலெக்டரை விடுவிப்பதில் இழுபறி நீடிக்கிறது.
“கலெக்டரும், இன்ஜினியரும் விடுவிக்கப்பட்டு விட்டனர் என்ற செய்தி தவறாக முன்னதாகவே வெளியிடப்பட்டதற்கு மன்னிப்பு தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் அவர்கள் வீடு திரும்பவில்லை. அவர்களை விடுவிப்பதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாளை அவர்கள் வீடு திரும்புவர்’ என, நக்சல் தரப்பு மத்தியஸ்தர் வரவர ராவ் தெரிவித்துள்ளார். “இருவரும் நாளை வீடு திரும்பி விடுவர்’ என, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார். ஆனால், இன்ஜினியர் மஜியை ஒரு ஸ்கூட்டரில் இருவர் சித்ரகோண்டா என்ற இடத்திற்கு அழைத்து வந்தனர் என்று ஆதாரபூர்வ தகவல்கள் நேற்றுமாலையில் வெளியானது.
ஒடிசாவில், மால்கங்கிரி மாவட்ட கலெக்டர் கிருஷ்ணாவும், இன்ஜினியர் மஜியும், கடந்த 16ம் தேதி, நக்சலைட்களால் கடத்தப்பட்டனர். இவர்களை விடுவிக்க, பல நிபந்தனைகளை நக்சலைட்கள் விதித்தனர். சிறையில் உள்ள தங்கள் பிரிவினர் 700 பேரை விடுவிக்க வேண்டும்; தங்களுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகளை விதித்தனர். இது குறித்து பேச, ஆந்திர பேராசிரியர்கள் இருவர், அரசு சார்பில் நியமிக்கப்பட்டனர்.
பேராசிரியர்கள் ஹர்கோபால், சோமேஸ்வர் ராவ் மற்றும் ஒடிசா உள்துறை செயலர் ஆகியோர் நக்சல்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், ஐந்து நக்சல்கள் மீதான வழக்குகள் வாபஸ் வாங்கப்படும் என்றும், போலீஸ் நடவடிக்கைகளும் வாபஸ் பெற்றுக் கொள்ளப்படும் என்றும், நக்சல்களிடம் தெரிவிக்கப்பட்டதாக, உள்துறைச் செயலர் உறுதியளித்தார். மேலும், ஸ்ரீராமுலு என்ற நக்சல் உட்பட 12 பேர், முக்கிய வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். எனினும் அவர்கள், மேலும் சில வழக்குகள் காரணமாக சிறையில் உள்ளனர். இவர்களை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என, நக்சல்கள் கோரிக்கை விடுத்துள்ளதால், அது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும், உள்துறைச் செயலர் உறுதியளித்தார்.
எனவே, இன்ஜினியரையும், கலெக்டரையும், நக்சல்கள் விடுவித்து விட்டனர் என நேற்று செய்தி வெளியானது. ஆனால், அதை மறுத்துள்ள நக்சல் மத்தியஸ்தர் வரவர ராவ், “அவர்கள் விடுவிக்கப்பட்டதாக தவறாக செய்தி வெளியிட்டு விட்டோம். அதற்கு மன்னிப்பு கோருகிறேன். எனினும், அவர்களை விடுவிப்பதற்கான நடைமுறைகளை துவக்கி உள்ளோம். எனவே, விரைவில் அவர்கள் விடுவிக்கப்படுவர்’ என தெரிவித்துள்ளார்.
இவர்கள் விடுதலை குறித்து, நேற்று சட்டசபையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்வர் நவீன் பட்நாயக் கூறியதாவது: நக்சல்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய மத்தியஸ்தர்கள், ஜர்படா சிறையில் உள்ள நக்சல் தலைவர் கண்டி பிரசாதத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்படி, இன்ஜினியரும், கலெக்டரும், இன்னும் 48 மணி நேரத்தில் விடுவிக்கப்படுவர் என உறுதியளித்துள்ளனர். அவர்கள் கூறியுள்ளபடி, இன்ஜினியரும், கலெக்டரும் நாளை வீடு திரும்புவர். இவ்வாறு நவீன் கூறினார்.
விடுதலை: கடத்தப்பட்ட இன்ஜினியர் மஜியை, இரண்டு கிராமவாசிகள் இருசக்கர வாகனத்தில் சித்ரகோண்டா என்ற இடத்திற்கு அழைத்து வந்ததாக அப்பகுதி தாசில்தார் தெரிவித்தார். மிகவும் களைப்பாக இருந்த அவரை அருகில் உள்ள பலிமேலா அணையில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு அழைத்து சென்றனர். தாசில்தார் அலுவலகத்திற்கு மஜி வந்த செய்தியறிந்து ஏராளமான மக்கள் அங்கு குழுமினர்.
Leave a Reply