புதுடில்லி:”இஸ்ரோ’ அனுப்பும் செயற்கைக்கோள்களில் உள்ள “எஸ்-பாண்ட்’ டிரான்ஸ்பாண்டர்களை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்துள்ளதாக வந்த செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை.
இது குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. அப்படியிருக்கையில், வருவாய் இழப்பு என்ற கேள்விக்கே இடமில்லை’ என்று, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோ செயற்கைக்கோள்களில், “எஸ்-பாண்ட்’ டிரான்ஸ்பாண்டர்களை தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ததில், அரசுக்கு, இரண்டு லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இது, மத்திய தணிக்கைத் துறை நடத்திய ஆய்வில் தெரியவந்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்த வகை ஸ்பெக்ட்ரம் உயர் ரகம் என்பதால், இதில் ஏற்பட்ட நஷ்டம் இரண்டு லட்சம் கோடி ரூபாய் என்று கூறப்பட்டது. ஆனால், தணிக்கைத்துறை தன் ஆய்வு முழுவதும் முடிவுறவில்லை என்று கூறியிருக்கிறது.பிரதமரின் நேரடி கண்காணிப்பில் உள்ள விண்வெளி கமிஷனின் கீழ் “இஸ்ரோ ‘வருவதால், இது குறித்து பிரதமர் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் கோரிக்கை எழுப்பின. இந்நிலையில், மத்திய தணிக்கை துறையும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமும்(இஸ்ரோ) உண்மை நிலையை விளக்கி நேற்று முன்தினம் இரவே அறிக்கை வெளியிட்டன.
இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர், “டிவி’ ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “இஸ்ரோவின் வேலை, செயற்கைக்கோள்களை அனுப்புவதும், பராமரிப்பதும்தான். டிரான்ஸ்பாண்டர்களை ஒதுக்கீடு செய்வதில் சம்பந்தம் இல்லை’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், நேற்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருந்ததாவது: தொலைத்தொடர்பில் அதிநவீன தொழில்நுட்பத்திற்கு பயன்படும், “எஸ்-பாண்ட்’ டிரான்ஸ்பாண்டர்களை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அப்படியிருக்கையில், இரண்டு லட்சம் கோடி ரூபாய், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறுவதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply