சென்னை : இந்தியாவில் இருந்து லண்டன், பாரிஸ், பிராங்பர்ட், டொரன்டோ ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களில், “ஒரு டிக்கெட் வாங்கினால், ஒரு டிக்கெட் இலவசம்’ என்ற திட்டத்தை, ஏர்-இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏர்-இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: லண்டன், பாரிஸ், பிராங்பர்ட், டொரன்டோ ஆகிய நகரங்களுக்கு, இந்தியாவில் இருந்து செல்லும் பயணிகளுக்கு சலுகை அளிக்கும் வகையில், “ஒரு டிக்கெட் வாங்கினால், ஒரு டிக்கெட் இலவசம்’ என்ற திட்டத்தை, ஏர்-இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. எக்சிகியூடிவ், முதல் வகுப்பு ஆகியவற்றில், கடந்த 27ம் தேதி முதல், வரும், 10ம் தேதி வரை, விமான டிக்கெட் வாங்கிய பயணிகளுக்கு, இச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகையை நேற்று முதல், வரும், ஏப்ரல் 30ம் தேதி வரை, பயன்படுத்தி, பயணம் செய்யலாம். இலவசமாக பெறப்படும் டிக்கெட்டுக்கு, எரிபொருள், “சர்ச் சார்ஜ்’ மற்றும் குறிப்பிட்ட சில வரிகளுக்கான பணம் மட்டும் செலுத்த வேண்டும். டிக்கெட் வாங்கியவரும், அவருடன் ஒருவரும் செல்லும் பயணத்திற்கு மட்டும், இச்சலுகை செல்லுபடியாகும். திரும்பும் பயணத்திற்கான டிக்கெட்டுக்கு இச்சலுகை பொருந்தாது.
இதுதவிர, ஐரோப்பிய நாடுகளில் உள்ள லண்டன், பாரிஸ், பிராங்பர்ட் போன்ற நகரங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு, “எக்சிகியூடிவ், முதல் வகுப்பு’ ஆகியவற்றில், 20 சதவீதமும், “எகானமி’ வகுப்பிற்கு, 10 சதவீதமும் சலுகை கட்டணம் அளிக்கப்படும். கடந்த 27ம் தேதி முதல், வரும், 10ம் தேதி வரை, விமான டிக்கெட் வாங்கிய பயணிகள், இச்சலுகையை பெறலாம். இந்த சலுகையும், ஏப்ரல் 30ம் தேதி வரை அமலில் இருக்கும். ஆமதாபாத், அமிர்தசரஸ், பெங்களூரு, மும்பை, கோழிக்கோடு, கோல்கட்டா, கொச்சி, டில்லி, சென்னை, ஐதராபாத் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் இருந்து லண்டன், பாரிஸ், பிராங்பர்ட் ஆகிய நகரங்களுக்கு சென்று திரும்பும் பயணிகளுக்கும் சலுகை கட்டணம் அளிக்கப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply