மும்பை: பாகிஸ்தானி தீவிரவாதி முகம்மது அஜ்மல் கசாப்புக்கு மும்பை தனி கோர்ட் வழங்கிய தூக்குத் தண்டனையை உறுதிப்படுத்தி பாம்பே உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
24 வயதாகும் கசாப் உள்பட 10 பேர் மும்பைக்குள் புகுந்து தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டு 166 பேரின் உயிரைப் பறித்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். மற்ற 9 பேரும் கமாண்டோப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
கசாப் மீதான வழக்கை விசாரித்த மும்பை தனி கோர்ட், அவனுக்கு தூக்குத் தண்டனை அளித்து உத்தரவிட்டது. இந்த தண்டனை தற்போது உறுதிப்படுத்தப்படுவதற்காக பாம்பே உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. இன்று அந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
வீடியோ கான்பரன்ஸிங் மூலம் நீதிபதிகள் முன்பு கசாப் ஆஜர்படுத்தப்பட்டான். பாதுகாப்பு கருதி கசாப்பை, உயர்நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லவில்லை என்று அவனது வக்கீல் பர்ஹானா ஷா தெரிவித்திருந்தார்.
பின்னர் தீர்ப்பளித்த நீதிபதிகள், கசாப் தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து, அவனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டனர்.
தீர்ப்பை எதிர்கொள்ள கசாப் இன்று அதிகாலையிலேயே தயாராகி விட்டான். அதிகாலையிலேயே கண் முழித்து விட்ட கசாப் தனது சிறை அறைக்குள், தொழுகை நடத்தினான். பின்னர் புனித திருக்குரானைப் படித்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயர்நீதிமன்றத்தில் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதை எதிர்த்து அடுத்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய கசாப்புக்கு வாய்ப்பளிக்கப்படும். அதிலும் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டால் தூக்கிலிடுவதற்கு நாள் குறிக்கப்படும். இருப்பினும் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் என பல்வேறு வசதிகள் தூக்குத் தண்டனைக் கைதிகளுக்கு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply