கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால்அரசு சமாளிக்கும்: பிரணாப் தகவல்

posted in: அரசியல் | 0

புதுடில்லி:”மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதட்டம் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயருமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

எந்த சூழ்நிலையையும் அரசு சமாளிக்கும். நிலைமையை அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது’ என, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.எகிப்தில், அதிபர் பதவி விலக, கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது, அரபு நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜோர்டான், ஏமன் போன்ற அரபு நாடுகளிலும் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டம் துவங்கியுள்ளது.

இதனால், மத்திய கிழக்கு மற்றும் அரபு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதட்டம் காரணமாக, கச்சா எண்ணெய் உற்பத்தி, கையிருப்பு குறித்து கவலையெழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயருமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில், டில்லியில் நேற்று நிருபர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, “மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமை துரதிருஷ்டவசமானது. நிலைமைகளை அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இது தொடர்பாக, பெட்ரோலிய அமைச்சகத்துடன், நிதி அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. அரசு, எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும். 2008ல், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பேரல், 147 டாலர்களை தொட்ட போது அரசு சமாளித்தது’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *