டெல்லி: கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பேச வந்த முதல்வர் கருணாநிதிக்கு கிட்டத்தட்ட 6 மணி நேர காத்திருப்புக்குப் பின்னரே அனுமதி வழங்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
மேலும் கருணாநிதியை எப்போதுமே மதிக்காத ராகுல் காந்தியையும் பேச்சுவார்த்தையின்போது உடன் வைத்துக் கொண்டு, அவரை விட்டு ஆட்சியில் பங்கு கேட்டுள்ளது காங்கிரஸ்.
நேற்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார் முதல்வர் கருணாநிதி. பிரதமரிடம் கேட்கப்பட்டிருந்த நேரத்திற்கு சரியாக அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டு சந்திப்பும் சிறப்பாகவே முடிந்தது.
முதல்வர் வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் கேட்ட பிரதமர் அவற்றுக்கு சாதகமான பதில்களையும் கொடுத்து முதல்வரை மனம் குளிர வைத்தார்.
இதையடுத்து பிற்பகல் 1 மணியளவில் சோனியா காந்தியை சந்திக்க கருணாநிதிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கு செல்வதற்காக தமிழ்நாடு இல்லத்தில் கிளம்பத் தயாரானார் முதல்வர். ஆனால் சோனியா அலுவலகத்திலிருந்து வருமாறு அழைப்பு வரவில்லை. இதனால் முதல்வர் காத்திருந்தார். ஆனால் நேரம் தான் போய்க் கொண்டிருந்ததே தவிர முதல்வருக்கு அழைப்பு வந்தபாடில்லை. இதனால் திமுக தரப்பு நெளிய ஆரம்பித்தது.
மாலை ஆகியும் அழைப்பு வராததால் திமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கிட்டத்தட்ட 6 மணி நேரம் காக்க வைத்து விட்டு 7 மணிக்கு அழைப்பு வந்து சேர்ந்தது. இதையடுத்து முதல்வர் கிளம்பிச் சென்றார்.
(இந்த பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தபோது முன்னாள் திமுக அமைச்சர் ராசாவிடம் சிபிஐ விசாரணை நடத்திக் கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது)
உடல் நலனையும் பொருட்படுத்தாமல், இத்தனை தூரம் சிரமப்பட்டு கிளம்பி வந்த முதல்வர் கருணாநிதியை இவ்வளவு நேரம் காக்க வைத்து விட்டதே காங்கிரஸ் என்ற முனுமுனுப்பு திமுக பிரமுகர்கள் மத்தியில் கிளம்பியது. இருப்பினும் முதல்வர் முகத்தில் அந்த அலுப்பு தெரியவில்லை. மாறாக, பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு திரும்பியபோது அவர் உற்சாகமாகவே காணப்பட்டார்.
காங்கிரஸாரின் இந்த காக்க வைத்த போக்கு குறித்து திமுகவினரும் உடனடியாக மறந்து விட்டனர். இப்போதாவது பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டார்களே. இதையும் ரத்து செய்து மேலும் ஒரு நாள் காக்க வைத்திருந்தால் நிலைமை மோசமாகியிருக்கும். எதிர்க்கட்சிகளின் வெறும் வாய்க்கு நாமே அவலைப் போட்டதாக மாறியிருக்கும் என்று சமாதானமாகிக் கொண்டனர்.
பேச்சுவார்த்தையின்போது என்ன நடந்தது?:
கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் சோனியாவும், முதல்வர் கருணாநிதியும் பேசியுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தையின்போது காங்கிரஸ் தரப்பில் 83 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டதாக தெரிகிறது. அந்தத் தொகுதிகளின் பட்டியலையும் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதை விட முக்கியமாக ராகுல் காந்தி பேசும்போது, இது வெறும் தொகுதிப் பங்கீடாக மட்டும் இல்லாமல், ஆட்சி அதிகாரத்திலும் பங்கீடு என்ற அளவில் இருந்தால் நல்லது என்று வலியுறுத்தினாராம்.
ராகுல் மூலமாக காங்கிரஸ் நெருக்கடி தந்தாலும், பதறிய காரியம் சிதறும் என்ற பொன்மொழியை நன்றாக உணர்ந்த முதல்வர், நமக்கு காரியம்தான் முக்கியம் என்ற ரீதியில் அதை அணுகினார் என்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சி தரப்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள், நிபந்தனைகள் உள்ளிட்டவற்றை கேட்டுக் கொண்ட முதல்வர் அதுகுறித்தும் பேசலாம் என்று மட்டும் கூறி விட்டு வந்துள்ளதாக தெரிகிறது.
காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் 48 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் இந்த முறை 83 தொகுதிகளுக்குக் குறைந்து எதைக் கொடுத்தாலும் ஏற்பதற்கில்லை என்ற ரீதியில் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு என்ற திட்டத்தை மனதில் வைத்தே இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.
மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன. இதில் காங்கிரஸ் 83 தொகுதிகளைக் கேட்கிறது. கடந்த முறை போட்டியிட்ட 48 தொகுதிகள் தவிர, கடந்த முறை இடதுசாரி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை அப்படியே கேட்கிறதாம். மேலும் சில தொகுதிகளையும் சேர்த்துக் கேட்கிறதாம்.
மறுபக்கம் பாமகவோ ஒரேயடியாக 50 தொகுதிகளைக் கேட்கிறதாம். கொடுத்தால் வருவோம், கொடுக்காவிட்டால் வேறு பக்கம் போவோம் என்பது போல இப்போது பாமக பேச ஆரம்பித்து விட்டதாம்.
இவர்களுக்கு இதைக் கொடுப்பதாக இருந்தால், 133 தொகுதிகள் போக மீதம் 101 தொகுதிகள்தான் இருக்கும். இதை வைத்துக் கொண்டு ஆட்சியமைக்க வாய்ப்பே இல்லை. எனவே கூட்டணி ஆட்சி என்ற நிலையை உருவாக்கும் நோக்கில்தான் காங்கிரஸ் திட்டமிட்டு இத்தனை தொகுதிகளைக் கேட்பதாக தெரிகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சம் 58 தொகுதிகள் வரை தர முடியும் என்று திமுக தரப்பி்ல தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பாமகவுக்கு 30 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டு விட்டதாம்.
140 தொகுதிகளில் திமுக:
திமுகவைப் பொறுத்தவரை 140 தொகுதிகளில் தான் போட்டியிடுவது, எஞ்சிய தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்குவது என்ற முடிவில் உறுதியாக உள்ளது.
இப்படி தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் இருந்தாலும் பேசி சரி செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் முதல்வர் கருணாநிதி இருக்கிறாராம்.
Leave a Reply