கரும்பு உற்பத்தியில் இந்தியா முதலிடம்: துணைவேந்தர் முருகேச பூபதி நம்பிக்கை

posted in: மற்றவை | 0

மதுரை : “”இந்தியாவில் கரும்பு உற்பத்தியில் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதால், உலகில் இரண்டாவது இடத்திலிருந்து விரைவில் முதலிடத்திற்கு முன்னேறும்,” என கோவை விவசாய பல்கலை துணை வேந்தர் முருகேச பூபதி குறிப்பிட்டார்.

மதுரை விவசாயக்கல்லூரியில் மண் மற்றும் சுற்றுப்புறச்சூழலியல் துறை சார்பில் நடந்த “கரும்பில் துல்லிய பண்ணை சாகுபடி பயிற்சி’ துவக்க விழாவில் அவர் பேசியதாவது:கரும்பு உற்பத்தியில் பிரேசில் முதலிடத்தில் உள்ளது. தற்பேது இந்தியாவில் கரும்பு சாகுபடியில் கன்று நடவு முதல், அறுவடை வரை நவீன தொழில் நுட்ப இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் முதலிடத்திற்கு முன்னேறும்.கோவை விவசாயக் கல்லூரியில், சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட கரும்பு அறுவடை இயந்திரங்கள் இரண்டு உள்ளன. 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேலும் 5 இயந்திரங்கள் வர உள்ளன. இவை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வாடகைக்கு தரப்படும். இயந்திரம் மூலம் அறுவடை செய்ய விரும்பும் விவசாயிகள் நடவு செய்யும் போது அதற்கு ஏற்ற வகையில் நடவு செய்ய வேண்டும்.சொட்டு நீர் பாசனத்திற்கு மத்திய அரசு 50 சதவீதம், மாநில அரசு 25 சதவீதம் மானியம் வழங்க உள்ளது.

இதற்கான உத்தரவுகள் விரைவில் வரஉள்ளது. இதனால் அனைத்து விவசாயிகளும் சொட்டுநீர் பாசனத்திற்கு மாறவேண்டும்.இந்தியாவில் விவசாய சாகுபடி குறைந்து வருகிறது. 1970ம் ஆண்டில் 28 லட்சம் எக்டேர் இருந்தது. தற்போது 21 லட்சம் எக்டேராக குறைந்துள்ளது. ஆனாலும் உற்பத்தி திறன் குறையவில்லை. விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. ஆனால் புதிய தொழில் நுட்பங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால், இதனால் பாதிப்பு ஏற்படாது. இந்தியாவில் 60 சதவீதம் விவசாயம் நடக்கிறது. அமெரிக்காவில் 8 முதல் 10 சதவீதம் மட்டுமே விவசாயம் நடந்தும் வல்லரசாக உள்ளது, என்றார்.விவசாய கல்லூரி முதல்வர் வைரவன், மனையியல் கல்லூரி முதல்வர் பானுமதி, துறை தலைவர் முகமது ஹாரூன், பேராசிரியர் பாக்கியத்து சாலிகா பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *