புதுடில்லி : “”கறுப்புப் பணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவும், அது தொடர்பான உளவுத் தகவல்களை சேகரிக்கவும் இந்திய வருவாய் சேவை (ஐ.ஆர்.எஸ்.,) பிரிவு அதிகாரிகள் பலரை பணியில் ஈடுபடுத்த, மத்திய நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக வழக்கமான வரி வசூல் பணியில் இருந்து, பல அதிகாரிகளை விடுவிக்கவும் தீர்மானித்துள்ளது. சிறிய நகரங்களிலும் இனி கண்காணிப்பு அதிகரிக்கும்.
அன்னிய நாட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ள கறுப்புப் பண விவகாரம் தொடர்பாக, மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. சுப்ரீம் கோர்ட்டும் இந்தப் பிரச்னையில் மத்திய அரசை சாடியுள்ளது. இருந்தாலும், சில நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் காரணமாக, அன்னிய நாட்டில் பணம் டிபாசிட் செய்துள்ளவர்களின் பெயர்களை வெளியிட மத்திய அரசு மறுத்து வருகிறது. அதே நேரத்தில், கறுப்புப் பண விவகாரத்தில் அதிக அக்கறை காட்ட தீர்மானித்துள்ளது. இங்குள்ளவர்கள் இனி வெளிநாட்டில் பணம் குவிக்கும் வேலையில் ஈடுபடுவதை தவிர்க்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: கறுப்புப் பணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவும், இதுதொடர்பான உளவுத் தகவல்களை சேகரிக்கவும், ஐ.ஆர்.எஸ்., அதிகாரிகள் பலரை பணியில் ஈடுபடுத்த மத்திய நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக வழக்கமான வரி வசூல் பணியில் ஈடுபட்டுள்ள ஐ.ஆர்.எஸ்., அதிகாரிகளை இந்தப் பணிக்கு திருப்பி விடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ற வகையில், விரைவில் அறிவிக்கை ஒன்றை நிதி அமைச்சகம் வெளியிடும்.கறுப்புப் பணம் தொடர்பான விசாரணை மற்றும் அந்தப் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துவது வருமானவரி துறையினருக்கு பெரிய சவாலாக உள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னர் 10 லட்ச ரூபாய் வரையிலான வருமானம் உள்ளவர்கள் தொடர்பான வரி வசூல் விவகாரங்களை மட்டுமே, வருமான வரித்துறை அதிகாரிகள் கவனித்து வந்தனர்.
அதற்கு மேலான வருமானம் உடையவர்கள் தொடர்பான வரி வசூல் பணிகளை ஐ.ஆர்.எஸ்., அதிகாரிகள் மேற்கொண்டனர்.தற்போது, 30 லட்சம் ரூபாய் வரையிலான வருமானம் உள்ளவர்கள் தொடர்பான வரி வசூல் பணிகளை, வருமான வரி அதிகாரிகளே மேற்கொள்ளலாம் என, உத்தரவிடப்பட்டுள்ளதால், கறுப்புப் பணம் தொடர்பான பணிகளில் ஐ.ஆர்.எஸ்., அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.அத்துடன் சர்வதேச வரிகள், விசாரணைகள், உளவுத் தகவல்கள் சேகரித்தல் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற சிறப்புப் பணிகளிலும் இனி ஐ.ஆர்.எஸ்., அதிகாரிகள் ஈடுபடுவர். இதன்மூலம் சாதாரண வரி நிர்வாக நடைமுறைகளில் இருந்து அவர்கள் விடுபட்டு, சிறப்புப் பிரிவுகளில் கவனம் செலுத்துவர்.
சிறிய நகரங்களில்… :அடுத்த நிதியாண்டின் துவக்கமான ஏப்ரல் 1 முதல் புதிய விதிமுறைகள் சில அமலுக்கு வர உள்ளன. அந்த விதிகள் அமலுக்கு வந்து விட்டால், சிறிய நகரங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகள், கம்பெனி அல்லாத சிறிய நிறுவனங்களின், அதாவது 15 லட்சம் முதல் 20 லட்சம் வரையிலான வருமானத்தைக் கொண்டுள்ள கம்பெனிகளின் கணக்குகளை கவனிப்பர்.அதே நேரத்தில், பெரு நகரங்களில் உள்ள இந்த அதிகாரிகள், 20 லட்சம் முதல் 30 லட்சம் வரையிலான வருமானம் உள்ள கம்பெனிசாரா நிறுவனங்களின் கணக்குகளை கையாள்வர். வருமான வரி செலுத்துவோரின் சுமையை குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இனி 30 லட்சத்திற்கும் மேலான வருமானம் கொண்ட நிறுவனங்களின் கணக்குகளை மட்டுமே, வருமான வரித்துறையில் உதவி கமிஷனர் மற்றும் துணை கமிஷனர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் கவனிப்பர். இவர்கள் எல்லாம் ஐ.ஆர்.எஸ்., அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு நிதி அமைச்சக மூத்த அதிகாரி கூறினார்.
ஜெர்மன், சுவிஸ் அரசுகள் உறுதி: “எங்கள் நாட்டில் கறுப்புப் பணத்தை டிபாசிட் செய்துள்ள இந்தியர்களின் பெயர் விவரங்களைத் தரத் தயார். ஆனால், அந்தப் பெயர் விவரங்களை, இந்திய அரசு பகிரங்கமாக வெளியிடக்கூடாது. இதுதொடர்பான உறுதி மொழியை அளிக்க வேண்டும்’ என, சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மன் நாடுகள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக அந்த நாடுகள் மேலும் கூறுகையில், “கருப்புப் பணம் டிபாசிட் செய்துள்ளவர்கள் பற்றிய எந்தத் தகவல்களை நாங்கள் தந்தாலும், அதை வெளியிடக்கூடாது. ரகசிய ஆவணமாகவே கருத வேண்டும். நீதிமன்றங்கள், நிர்வாக அமைப்புகள் போன்றவற்றுக்கு மட்டுமே அவற்றைத் தர வேண்டும்’ என, கூறியுள்ளன.
Leave a Reply