டெல்லி: லிபியாவில் கடாபி ஆட்சிக்கெதிராக தொடர்ந்து நடக்கும் கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்ததையடுத்து, அந்நாட்டுக்கு யாரும் செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
துனிசீயா, எகிப்து ஆகிய நாடுகளைத் தொடர்ந்து லிபியாவில் ஜனநாயக ஆட்சி கோரி மக்கள் புரட்சி வெடித்துள்ளது. 42 ஆண்டுகளாக அதிபர் பதவியில் இருக்கும் மொம்மர் கடாபிக்கு எதிராக கடுமையான போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தை அடக்க ராணுவமும் அதிபர் ஆதரவாளர்களும் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
இதனால் கடந்த ஒரு வாரமாக லிபியா முழுவதும் போர்க்களமாக காட்சி அளிக்கிறது. இந்த நிலையில், ‘இந்தியாவில் இருந்து லிபியாவுக்கு யாரும் செல்ல வேண்டாம்’ என மத்திய அரசு நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், “லிபியாவில் 18 ஆயிரம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். அங்கு நிலவும் சூழ்நிலையை வெளியுறவுத் துறை உன்னிப்பாக கவனித்து வருகிறது.
தற்போதைய நிலையில், வட கிழக்கு பகுதியில் உள்ள பெங்காஜி, டெர்னா, பெய்டா, துர்பக் ஆகிய நகரங்களில் கொந்தளிப்பு நிலவுவதாக தெரிகிறது.
லிபியாவில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அந்த நாட்டுக்கு இந்தியாவில் இருந்து யாரும் பயணம் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. லிபியா தலைநகர் திரிபொலியில் உள்ள இந்திய தூதரகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக, கூடுதல் தகவல்கள் மற்றும் உதவியை பெறலாம்…” என்றார்.
பலி எண்ணிக்கை 300ஆக உயர்வு
இதற்கிடையே, லிபியாவில் நேற்றும் பல இடங்களில் கலவரம் வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. மேலும், அதிபரின் ஆதரவாளர்கள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் நடத்தினார். இதனால், பெங்காஜி நகரில் மட்டும் 15 பேர் பலியானதாக மருத்துவத் துறை அதிகாரி கூறினார்.
ஆனால், துபாயை சேர்ந்தவரும் ‘லிபியன் விடுதலை முன்னணி’ அமைப்பின் உறுப்பினருமான முகமது அப்துல்லா என்பவர், “கடந்த செவ்வாய் கிழமை முதல் நடந்து வரும் போராட்டத்தில் இன்று (நேற்று) பலி எண்ணிக்கை மிகவும் உயர்ந்துள்ளது. பெங்காஜி நகரில் இருந்து வரும் தகவல்களை வைத்து பார்க்கும்போது பலி எண்ணிக்கை 300-ஐ எட்டியுள்ளது” என்றார்.
Leave a Reply