காடுகளை அழித்து கிரிக்கெட் மைதானமா? – ஜெயராம் ரமேஷ் கண்டனம்

posted in: மற்றவை | 0

திருவனந்தபுரம்: நாட்டின் இயற்கை வளமான காடுகளை அழித்து கிரிக்கெட் மைதானம் கட்டுவது அவசியம்தானா? என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

கேரளத்தில் கொச்சிக்கு அருகில் உள்ள எடகொச்சி என்ற இடத்தில் அடர்த்தியான மாங்குரோவ் காடுகள் இயற்கையாக அமைந்துள்ளன. இந்தப் பிரதேசத்தை அழித்து கிரிக்கெட் மைதானம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது கிரிக்கெட் அமைப்பு.

இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) அணிகளில் கொச்சி அத்ணியும் இடம்பெற்றுள்ளதால் அங்கு விளையாட்டை நடத்தும் பொருட்டு இந்த மைதானத்தை நிறுவ இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

இந்த மைதானத்துக்காக பல ஏக்கர் பரப்பில் அடந்து செழித்து வளர்ந்துள்ள மாங்குரோவ் காடுகள் அழிக்கப்படவுள்ளன. இதனால் திட்டத்துக்கு அந்த மாநில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அந்த மாநிலத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எந்த ஒரு அரசியல் கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஒருமித்தமாக ஆதரவுதான் தெரிவித்துள்ளனர்.

மாங்குரோவ் காடுகளை அழித்து கிரிக்கெட் மைதானம் நிறுவ உள்ளதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் வெளிப்படையான எதிர்ப்பையும் ஆட்சேபத்தையும் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை தென்மாநில வன அமைச்சர்களின் 4-வது மாநாட்டை தொடங்கி வைத்து அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

“நாட்டின் மதிப்பிட முடியாத சொத்து மாங்குரோவ் காடுகள். தென் மாநிலங்களில்தான் இந்த காடுகள் அதிகம் உள்ளன. ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக இக்காடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. காரணம் மனிதர்களின் விஷமத்தனமான திட்டங்கள்தான்.

சுனாமி போன்ற இயற்கை பேரிடரின்போது மனித சமுதாயத்துக்கே அரணாகவும் உள்ளவை மாங்குரோவ் காடுகள்தான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி தாக்கிய போது இதை அனுபவத்தின் மூலம் உணர்ந்தோம். கடலோரப் பகுதியில் மாங்குரோவ் காடுகள் இருந்த பகுதியில் எல்லாம் பாதிப்பின் தன்மை குறைவாக இருந்ததை நாம் அறிவோம்.

இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த மாங்குரோவ் காடுகளை அழித்து எடகொச்சி என்ற இடத்தில் கிரிக்கெட் மைதானம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளனர். இதற்கு கேரளத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே ஒருமித்தமாக ஆதரவு தெரிவித்துள்ளது கவலை அளிக்கும் விஷயம்.

இந்த இடத்தில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பாக நமக்கு மாங்குரோவ் காடுகள் முக்கியமா? அல்லது கிரிக்கெட் முக்கியமா? என்ற கேள்வியை நமக்கு நாமே எழுப்பி பதில் தேட முற்பட வேண்டும்.

காடுகள் அழிந்தால் என்ன நடக்கும் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளாமலேயே பலர் செயல்படுவதுதான் இன்று மோசமான பருவ கால மாறுதல்களைத் தோற்றுவித்து வருகிறது.

தென் மாநிலங்களில் மாங்குரோவ் காடுகள் அழிந்து வருவது கவலைக்குரிய விஷயம். இக்காடுகளை பாதுகாக்கவும், இக்காடுகளின் பரப்பளவை விஸ்தரிக்கவும் மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழங்குடியினர் பற்றிய பார்வை மாற வேண்டும்!

பழங்குடியினர் பற்றிய வனத்துறை அதிகாரிகளின் பார்வை நிச்சயம் மாற வேண்டும். காடுகளுக்கு பழங்குடி மக்களே முக்கிய அரண்களாக இருக்கும்படி வனத்துறையினர் பார்த்துக்கொள்ள வேண்டும். தேவையில்லாமல் அவர்கள் மீது வன பாதுகாப்புச் சட்டத்தைப் பாய்ச்சக் கூடாது.

பசுமை இந்தியா…

‘பசுமை இந்தியா இயக்கம்’ திட்டத்தின் மூலம் நாட்டில் தரமான காடுகள் மற்றும் அதன் பரப்பை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் ஒரு பகுதியாக இந்த தேசியத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்துக்கு பிப்ரவரி 22-ல் பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளிக்கவுள்ளார்.
நாடு முழுவதும் இன்னும் 50 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் காடுகளை உருவாக்கி பாதுகாப்பதுதான் இத்திட்டத்தின் குறிக்கோள்.

இத்திட்டம் வழக்கம்போல் மாநில வனத்துறைகள் மூலம் செயல்படுத்தப்படாது. கிராமப் பஞ்சாயத்துகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், வன மேலாண்மை குழுக்கள் மூலம் அமல்படுத்தப்படும். காடுகளை மக்களே உருவாக்கி பாதுகாக்க வேண்டும். இதற்கு தொழில்நுட்ப ரீதியான உதவிகள் மட்டும் மாநில வனத்துறையிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்படும்,” என்றார் ஜெய்ராம் ரமேஷ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *