காவிரி நீருக்கான உரிமை மீட்க திணறும் தமிழகம்: மேட்டூர் அணை நீரையும் இழக்க போகும் அவலம்

posted in: மற்றவை | 0

காவிரி நீருக்காக, தங்கள் உரிமையை படிப்படியாக இழந்து வரும் தமிழகம், கர்நாடகா அரசு, குடிநீர் எடுப்பதன் மூலம், வருங்காலத்தில், மேட்டூர் அணை நீரையும் கர்நாடகாவுக்கு, தாரை வார்க்க வேண்டிய பரிதாபநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கடந்த, 1924 பிப்.,18ல், சென்னை மாகாணமும், மைசூர் அரசும் செய்து கொண்ட ஒப்பந்தபடி, காவிரியின் குறுக்கே, 1929ல் கர்நாடகா அரசு, 45 டி.எம்.சி., நீர் கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ்., அணையை கட்டியது. தமிழகத்தில், காவிரியின் குறுக்கே, 1934ல், 93.470 டி.எம்.சி., நீர் கொள்ளளவு கொண்ட, மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டது.கடந்த, 1924 ஒப்பந்த காப்பு நெறிகள் படி, சென்னை மாநிலத்துக்குள் (தமிழகம்) காவிரியின் துணை ஆற்றின் குறுக்கே அணை கட்ட கட்டுப்பாடற்ற உரிமை சென்னை அரசுக்கு உண்டு. அதன்படி பவானி, அமராவதி, நொய்யல் துணை ஆறுகளின் குறுக்கே, சென்னை அரசு அணை கட்டினால், அதில், தேக்கும் நீரில், 60 சதவீத அளவு நீரை தேக்கும் அளவிற்கு, மைசூர் மாகாண அரசு தங்கள் மாநிலத்தில் காவிரி துணை ஆற்றின் குறுக்கே அணை கட்டலாம்.காப்பு நெறியின்படி, 1953ல், சென்னை அரசு தமிழகத்தில் பவானி குறுக்கே , 2.56 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் அணை கட்டியது. மற்றொரு கிளை ஆறான அமராவதியின் குறுக்கே, 21 ஆயிரத்து 520 ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில் சிறிய நீர்தேக்கம் கட்டியது.

கடந்த, 1956ல் மொழிவாரி மாநில சீரமைப்பின்படி, மைசூர், சென்னை ஆகியவை கர்நாடகா, தமிழ்நாடு என, மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. பின் தங்கள் மாநிலத்தில், நீர் ஆதாரங்களை விரிவுபடுத்த திட்டமிட்ட கர்நாடகா அரசு, பவானி அணைக்கு எதிராக கபினியாற்றின் குறுக்கே அணை கட்டியது.அதேநேரம் கர்நாடகா அரசு, 1924 ஒப்பந்தத்தை மீறி, காவிரியின் துணை ஆறுகளான ஹேமாவதி, ஹேரங்கி ஆகியவற்றின் குறுக்கே அணைகளை கட்டி தமிழகத்துக்கு கூடுதலாக கிடைக்க வேண்டிய நீரை தடுத்தது. 1924 ஒப்பந்தபடி, கர்நாடகா ஆண்டுதோறும் தமிழகத்துக்கு, 575.68 டி.எம்.சி., நீர் வழங்கியது.அதன் மூலம் டெல்டா மாவட்டங்களில், 16.5 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது. கடந்த, 1924ல் போடப்பட்ட ஒப்பந்தம், 1974ல் காலவாதியானது. அப்போதைய தி.மு.க., அரசு, ஒப்பந்தத்தை புதுப்பிக்க தவறியதால், தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டதாக விவசாயிகள் மத்தியில் குற்றச்சாட்டு இருந்தது.

ஒப்பந்தம் காலாவதியானதால், காவிரி பாசனபகுதியில், 11 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன பரப்பை அதிகரிக்க கூடாது என்ற விதியை மீறிய கர்நாடகா, 6.60 லட்சம் ஹெக்டேர் கூடுதல் பாசன பகுதியை உருவாக்கியது. அதனால், தமிழகத்துக்கு வழங்கிய நீரின் அளவு படிப்படியாக குறைய துவங்கியது. நீர்வரத்து குறைந்ததால், டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதிர்ச்சியடைந்த தமிழ்நாடு காவிரி நீர்பாசன விளை பொருட்கள் விவசாயிகள் சங்கம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்ற உத்தரவுபடி, 1990ல் காவிரி நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

கடந்த 1991 ஜூன்25ல், கர்நாடகா ஆண்டுதோறும், தமிழகத்துக்கு, 205 டி.எம்.சி., நீர் வழங்க வேண்டும் என, இடைக்கால தீர்ப்பு கூறிய நடுவர் மன்றம் 2007ஃபிப்.,5ல் வழங்கிய இறுதி தீர்ப்புபடி, தமிழகம், 419 டி.எம்.சி., கர்நாடகா, 270 டி.எம்.சி., கேரளா, 30 டி.எம்.சி., புதுச்சேரி, 7 டி.எம்.சி., நீரை பகிர்ந்து கொள்ள வேண்டும்.அதன்படி கர்நாடகா ஆண்டுதோறும் தமிழகத்திற்கு, 185 டி.எம்.சி., புதுச்சேரிக்கு, 7 டி.எம்.சி., சேர்த்து மொத்தம், 192 டி.எம்.சி., நீர் வழங்க வேண்டும். இடைக்கால மற்றும் இறுதி தீர்ப்பு இரண்டையுமே மதிக்காத கர்நாடகா, தங்கள் மாநிலத்தில் அணைகள் நிரம்பினால் மட்டுமே, தமிழகத்துக்கு நீர் திறப்பதை வாடிக்கையா கொண்டுள்ளது.

அதனால், 2001 முதல் 2004 வரை, டெல்டா மாவட்டங்களில், நெல் சாகுபடி கடுமையாக பாதித்தது. ஏற்கனவே, அணை நிரம்பினால் மட்டுமே, தமிழகத்துக்கு நீர் திறக்கும் கர்நாடகா, அந்த நீரின் ஒரு பகுதியை குடிநீருக்கு எடுப்பதற்காக மேட்டூர் அணையில் பம்பிங் ஸ்டேஷன் அமைக்க முயற்சிக்கிறது.கர்நாடகாவின் இந்த அத்துமீறல் மூலம் ஏற்கனவே, காவிரி நீர் பிரச்னையில் தங்கள் உரிமையை இழந்து தவிக்கும் தமிழகம், தற்போது தங்களின் உடைமையான, மேட்டூர் அணை நீரையும் வருங்காலத்தில் பறிகொடுக்க வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களை பாதுகாக்க தமிழக அரசு இனியாவது விழித்து கொள்வது அவசியம்.

சந்தன வீரப்பனுக்கு மிரண்ட கர்நாடகம் : தமிழக அரசுக்கு அல்வா தரும் அவலம் : தமிழக-கர்நாடகா வனப்பகுதியில், சந்தனமரங்களை வெட்டி கடத்திய வீரப்பனை பிடிக்க, தமிழக-கர்நாடகா அதிரடிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 1987ல் முதல் இருமாநில அரசும், வீரப்பனை தீவிரமாக தேடி வந்தது. அந்த சமயத்தில் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக, கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட பலரையும் வீரப்பன் கடத்தினான்.அதனால், பாலாறு முதல் ஒனேக்கல் வரை எல்லைப்பகுதியில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த கர்நாடகா அரசியல் கட்சியினர் தயங்கினர். கர்நாடகாவின் முக்கிய பிரமுகர்கள் கூட ஒகேனக்கல் வர தயங்கினர். கர்நாடகாவும், தமிழகத்துக்கு பாதகமான நடவடிக்கையில் ஈடுபடவில்லை.கடந்த 2004 அக்.,18ல் தமிழக சிறப்பு அதிரடிப்படையினர் வீரப்பனை சுட்டு கொன்றனர். அதன் பின்னர் ஒனேக்கல்லுக்கு, கர்நாடகா பிரமுகர்கள் வரத்து அதிகமானது. கர்நாடகா அரசும் பாலாறு எல்லைப்பகுதியில் குழாய் பதித்து, மேட்டூர் அணையில் துணிச்சலாக குடிநீர் எடுக்க ஆயத்த பணி மேற்கொண்டுள்ளது.வீரப்பன் இருந்தபோது, நிறைவேற்றிய தயங்கிய திட்டத்தை, தற்போது கர்நாடகா துணிச்சலுடன் நிறைவேற்றுவது குறிப்பிடத்தக்கது.

டெல்டா வறட்சியின் போது கருணை காட்டாத கர்நாடகா : கடந்த, 2002ம் ஆண்டு நிலவிய வறட்சி காரணமாக, மேட்டூர் அணை நீர்வரத்து குறைந்து, டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர் கருகியது. அப்போது, “டெல்டா பயிர்களுக்கு உயிர் கொடுக்க தமிழகத்துக்கு, தினமும், 1.25 டி.எம்.சி., நீர் வழங்க வேண்டும்’ என, உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது.தீர்ப்பை கர்நாடகா அரசு ஏற்க மறுத்ததால் அப்போதைய பிரதமரும், காவிரி நீர் ஆணையத்தின் தலைவருமான வாஜ்பாய், “1.25 டி.எம்.சி., கூட தேவையில்லை, தினமும், 9,000 கனஅடி நீர் (0.75 டி.எம்.சி.) தமிழகத்துக்கு வழங்க வேண்டும்’ என, உத்தரவிட்டார். அதையும் கர்நாடகா அரசு புறக்கணித்தது.கருகும் பயிர்களுக்கு, கருணை காட்டாத கர்நாடகாவின் செயலால், டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதித்தனர். 2002ல் டெல்டா சாகுபடி பாதித்ததால் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, 2003 மே 28ல் டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணமாக, 325 கோடி ரூபாயை ஒதுக்கி உத்தரவிட்டார்.குடிநீர் ஒவ்வொரு மனிதனுக்கு இன்றியமையாதது. மாதேஸ்வரன் மலை மக்களுக்காக, மேட்டூர் அணையில் இருந்து கர்நாடகா குடிநீர் எடுப்பதில் தவறில்லை. ஆனால், 2002ல் கருகும் பயிர்களை கண்டு, தமிழக விவசாயிகள் கதறியபோது, அணைகளில் போதிய நீர் இருந்தும், கருணை காட்டாத கர்நாடகா அரசு, மேட்டூர் அணையில் குடிநீர் எடுப்பது எந்த வகையில் நியாயம்.கருணையே இல்லாத கர்நாடகாவின் நடவடிக்கையை எப்படி ஏற்று கொள்ள முடியும் என, தமிழக மக்களும், விவசாயிகளும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

* அரசியல் கட்சிகள், விவசாயிகள் மௌனம் : தமிழகம் மற்றும் தமிழர் பிரச்னை என்றால், உடனடியாக பல்வேறு தமிழர் இயக்கங்கள் எதிர்ப்பு குரல் கொடுப்பது வழக்கம். அரசியல் கட்சிகளை பொறுத்தவரை தி.மு.க.,- பா.ம.க.,- வி.சி.,- ம.தி.மு.க., ஆகிய கட்சிகளும் அவ்வப்போது தமிழர்கள் உரிமை பிரச்னை குறித்து அறிக்கை வெளியிடுவதும் வாடிக்கை.
ஆனால், கர்நாடகா அத்துமீறி, மேட்டூர் அணையில் குடிநீர் எடுக்க திட்டமிட்டுள்ளதை தெரிந்தும், தமிழகத்தின் உரிமைக்காக போராடுவதாக கூறும் அரசியல் கட்சிகள் கூட, குடிநீர் பிரச்னை குறித்து இதுவரை எந்த ஒரு அறிக்கையும் விடாமல் மவுனம் காப்பது குறிப்பிடத்தக்கது. மேட்டூர் அணை வறண்டு, பாசனத்துக்கு நீர் இல்லாத சூழல் ஏற்படும் நேரத்தில், வெகுண்டு எழும் டெல்டா விவசாயிகள், அரசின் கலர்,”டிவி’, காஸ் அடுப்பு போன்ற இலவசங்கள் கிடைக்காவிடில் போராட்டம், மறியல் நடத்தும் தமிழக மக்கள் கூட, தங்கள் வாழ்வாதாரத்தின் ஒன்றாக மேட்டூர் அணை தண்ணீருக்கு ஆபத்து ஏற்பட்ட சூழ்நிலையில் அமைதி காத்து வருகின்றனர். காரணம் இவர்கள் தமிழர்கள்.இது போன்ற நிலை கர்நாடகாவில் ஏற்பட்டிருந்தால், தமிழர்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதை, வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *