திருவனந்தபுரம்:கேரளாவில், பிளாச்சிமடா கோகோ கோலா கம்பெனியால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு இழப்பீடு வழங்குவதை முடிவு செய்ய சிறப்பு தீர்ப்பாயம் அமைக்க சட்டசபையில் மசோதா நிறைவேறியது.
கேரளாவில், பாலக்காடு மாவட்டம் பிளாச்சிமடாவில், செயல்பட்டு வந்த கோகோ கோலா குளிர்பான தொழிற்சாலையால் சுற்றுச்சுழல் பாதிக்கப்படுவதாகவும், நிலத்தடி நீர் மாசடைந்ததாகவும் கூறி ஊர் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.ஆலையில் இருந்து வெளியேறிய கழிவுநீரால், பொதுமக்களுக்கு பல்வேறு விதமான தொற்று நோய்கள் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. தவிரவும் நல்ல நீரை அதிகளவில் ஆழ்குழாய் மூலம் உறிஞ்சி, எதிர்கால வளத்தை பாதிப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. இதையடுத்து, ஆலையில் குளிர்பானங்கள் தயாரிக்கவும், விற்பனை செய்யவும் மாநில அரசு தடை விதித்தது.இது தொடர்பாக, கேரள ஐகோர்ட்டிலும் வழக்கு நடந்து வருகிறது.
இதற்கிடையில், இந்த ஆலையில் பொதுமக்களுக்கு உடல் ரீதியாகவும், விவசாயிகளுக்கு தொழில் ரீதியாக ஏற்பட்ட பாதிப்புக்கு நஷ்ட வழங்குவது தொடர்பாக மதிப்பீடு செய்ய உயர்மட்ட கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது.இக்கமிட்டி, கோகோ கோலா கம்பெனி ஆலையில் பிளாச்சிமடா கிராம மக்களுக்கு 216 கோடியே 16 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்தது. இந்நிலையில் நேற்று கேரள சட்டசபையில் இது குறித்து பிரச்னை எழுப்பப்பட்டது.பிளாச்சிமடா மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு ஒவ்வொருவருக்கும் எவ்வளவு இழப்பீடு வழங்குவது என்பது குறித்து முடிவு செய்ய, சிறப்பு தீர்ப்பாயம் அமைக்கும் மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு ஏகமனதாக நிறைவேறியது.
சிறப்பு தீர்ப்பாயத்தில் மூன்று உறுப்பினர்கள் இடம் பெற்று இருப்பவர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தரப்பில் இருந்து தலா ஒரு உறுப்பினரும் இடம் பெற்று இருப்பர். மாவட்ட நீதிபதி ஒருவர் இதன் தலைவராக இருப்பார்.இந்த தீர்ப்பாயம் பிளாச்சிமடா மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை மதிப்பீடு செய்து, அதற்கேற்ப இழப்பீடு தொகை கிடைக்க பரிந்துரை செய்யும்.இதற்கிடையில், இந்த தீர்மானம் குறித்து கோகோ கோலா கம்பெனி தரப்பில் கூறுகையில், “எங்கள் தரப்பு கருத்துக்களை கேட்க வாய்ப்பு அளிக்கப்படாமல், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசு கூறும் புகாரை விஞ்ஞான ஆதாரங்களுடன் நிரூபிக்கவில்லை’ என கருத்து தெரிவித்தனர்.சர்வதேச அளவில் உள்ள நிறுவனத்திற்கு எதிராக இம்மாதிரியான நடவடிக்கை புதுமையானது என்று கூறப்பட்டது. ஆனால், முதல்வர் அச்சுதானந்தன் இந்த விஷயத்தில் விடாப்பிடியாக இருந்து முடிவு எடுக்க காரணமாக இருந்தார். தவிரவும், சட்டசபை முழுவதும் இதற்கு ஆதரவு தெரிவித்திருப்பது சிறப்பம்சமாகும்.
Leave a Reply