சொத்துக்குவிப்பு வழக்கில் வாய்தா மேல் வாய்தா வாங்கிய ஜெயலலிதாவுக்கு ஸ்பெக்ட்ரம் வழக்கு பற்றி பேச அருகதை கிடையாது என்று துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தென்சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் விளக்க பொதுக்கூட்டம் சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சி பள்ளி விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. விழாவுக்கு தி.மு.க. பொதுச்செயலாளரும் நிதி அமைச்சருமான பேராசிரியர் அன்பழகன் தலைமை தாங்கினார். இந்த பொதுக்கூட்டத்தில், தி.மு.க. பொருளாளரும், துணை முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:-
தி.மு.க. அரசு பல திட்டங்களையும், சாதனைகளையும் புரிந்திருக்கிறது. அண்ணா சாலை அருகே அழகும் கலைநயமும் கொண்டு கம்பீரமாக நிற்கும் புதிய சட்டசபை வளாகம் சென்னை நகருக்கு மாபெரும் பெருமை ஆகும். அதேபோல், கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டுவிழா நூலகம் தெற்கு ஆசியாவிலேயே பெரிய நூலகமாக திகழ்கிறது. வடசென்னை மக்களின் குடிநீர் பிரச்சினையை போக்குவதற்காக மீஞ்சூரில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம்.
அதேபோல், தென்சென்னை மக்களின் குடிநீருக்காக மத்திய அரசின் உதவியுடன் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெமிலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.15 ஆயிரம் கோடி செலவில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். 45 கிலோ மீட்டர் நீளம் தூரத்திற்கு ரெயில்பாதை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இப்படி தி.மு.க. அரசு பல சாதனைகளை செய்துள்ளது. ஆட்சி பொறுப்புக்கு வந்து 5 ஆண்டுகள் நெருங்கி வரும் நிலையில், மக்கள் தாங்கள் வைத்த கோரிக்கைகளை என்ன ஆனது என்று கேட்பார்களே என்ற அச்சம் இல்லாமல், அனைத்தையும் செய்துமுடித்து, கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றி, தேர்தல் பிரசாரத்திற்கு மக்களிடம் செல்லும் தைரியம் தி.மு.க.வுக்கு மட்டுமே உண்டு.
எனவே, தி.மு.க. ஆட்சி மீது குறைசொல்ல முடியாது என்பதால், ஸ்பெக்ட்ரம் பிரச்சினையை கையில் எடுத்துள்ளார்கள். ஸ்பெக்ட்ரம் பிரச்சினை பற்றி மக்களிடையே பொய் பிரசாரம் செய்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணைக்கு ஆ.ராசா முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். அவர் எப்போதாதவது விசாரணைக்கு செல்லாமல் இருந்தாரா? எந்த குற்றமும் செய்யாத ராசா மீது பொய்குற்றம் சுமத்துகிறார்கள்.
டான்சி வழக்கில் ஜெயலலிதா மீது வழக்கு போடப்படவில்லையா? அரசு சொத்துக்களை அபகரித்த போதிலும் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா எத்தனை வாய்தா வாங்கினார்? வாய்தா ராணியான ஜெயலலிதாவுக்கு ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை பற்றி பேச யோக்கியதையோ, அருகதையோ கிடையாது.
தி.மு.க.வை யாரும் அழிக்க முடியாது. யாராவது அழிக்க முயன்றால் அவர்கள்தான் அழிந்து போவார்கள். முதல்-அமைச்சர் கருணாநிதி 6-வது முறையாக ஆட்சி பொறுப்புக்கு வந்து தி.மு.க. ஆட்சி தொடரும்.
இவ்வாறு துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
அமைச்சர் அன்பழகன் தலைமை தாங்கிப் பேசும்போது கூறியதாவது:-
தமிழர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தும் வரலாற்றில் பலமுறை ஏமாந்து போயிருக்கிறார்கள். தமிழகத்தில் தி.மு.க. அமைப்பு மட்டும் இல்லாவிட்டால், இந்த ஜனநாயக கருவி இருந்திருக்காவிட்டால் தமிழகத்தை யார் வேண்டுமானாலும் சூரையாடியிருப்பார்கள்.
தமிழ்இனத்தை, தமிழ் உணர்வை, தமிழர்களின் சுயமரியாதை நிலைநிறுத்துவதற்காக பேரறிஞர் அண்ணா 1949-ம் ஆண்டு தி.மு.க. இயக்கத்தை தொடங்கினார். அண்ணாவின் வழியில் அவரது நம்பிக்கைக்கு உரியவரான கருணாநிதி தமிழகத்தில் தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகிறார்.
முதல்-அமைச்சர் பதவி அவருக்கு பெரியதல்ல. அதைவிட பெரிய மதிப்பை, புகழை எல்லாம் பெற்றிருக்கிறார். இங்கேயே பேசியவர்கள், கருணாநிதி 6-வது முறையாக தமிழகத்தின் முதல்-அமைச்சர் ஆவார் என்று குறிப்பிட்டார்கள்.
அப்படிச் சொல்வது தவறு, தமிழகத்தை 6-வது முறையாக பாதுகாக்க அவரை ஒரு கருவியாக பயன்படுத்திக்கொள்வோம் என்றுதான் கூற வேண்டும். தி.மு.க.வை தவிர தமிழக மக்களின் நலனை நாடக்கூடிய வேறு இயக்கம் தமிழகத்தில் கிடையாது. மற்றவர்கள் யாரும் அந்த உரிமையை கொண்டாட முடியாது.
இவ்வாறு அமைச்சர் அன்பழகன் கூறினார்.
அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பரிதி இளம்வழுதி, தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் எஸ்.பி.சற்குணபாண்டியன் ஆகியோரும் பேசினார்கள். முன்னதாக, தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் வரவேற்றார். இறுதியில், சைதாப்பேட்டை பகுதிச் செயலாளர் எம்.முகேஷ்குமார் நன்றி கூறினார்.
Leave a Reply