சென்னை:”ஓய்வில் இருக்கும் ஜெயலலிதா’ என்று நிதியமைச்சர் குறிப்பிட்டதற்கு, அ.தி.மு.க., வினர் எதிர்ப்பு தெரிவித்ததால், சட்டசபையில் நீண்ட நேரம் அமளி ஏற்பட்டது.
இறுதியில் அ.தி. மு.க., வினர் வெளிநடப்பு செய்தனர்.பட்ஜெட் மீதான விவாதத்தின் இறுதியாக, நிதியமைச்சர் தனது பதிலுரையை துவக்கிய போது நடந்த விவாதம்:
நிதியமைச்சர் அன்பழகன்: இந்த பொறுப்பில் இருந்து நான் பேசும் இறுதியான பேச்சு இது. அடுத்து ஆளுங்கட்சியாக வந்து அமருவோம் என எதிர்க்கட்சியினர் பேசினர். அப்படி ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால், மக்கள் செய்வார்களா? ஓய்வு எடுப்பவரை முதல்வராக்க முயற்சிக்கின்றனர்.(இவ்வாறு நிதியமைச்சர் கூறியதும், அ.தி.மு.க., தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது).
அன்பழகன்: ஓய்வு எடுப்பவர் என்று சொன்னால், உங்களுக்கு ஏன் கடுப்பு. ஓய்வெடுப்பதாக சட்டசபையில் நீங்கள் கொண்டு வந்த தீர்மானத்தில் உள்ள வாசகத்தை தான் சொன்னேன். அந்த வாசகங்களை நீங்கள் கூறவில்லை என்றால், அதை திரும்பப் பெறுகிறேன்.
அமைச்சர் துரைமுருகன்: ஓ.பன்னீர்செல்வம் மிகவும் காரசாரமாக பேசினார். ரவுடிகள் ஆட்சி என்றெல்லாம் அவர் குறிப்பிட்ட போது அமைதியாக இருந்தோம். ஓய்வு எடுப்பவர் என்று கூறுவது தவறானதல்ல. நீங்கள் ஒருத்தர் கூட திரும்பி வர மாட்டீர்கள்.
அன்பழகன்: நீங்கள் கொண்டு வந்த தீர்மானத்தில், உடல்நலக் குறைவு காரணமாக பூரண ஓய்வு எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளீர்கள்.(அ.தி.மு.க.,வினர் எழுந்து நின்று தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், சபையில் குழப்பம் நிலவியது).
சபாநாயகர்: உழைப்பவர் ஓய்வு எடுக்கிறார். அதில் தவறான வாசகம் என்ன இருக்கிறது. (ஜெயலலிதா சட்டசபைக்கு வராமல் இருக்க, அ.தி. மு.க.,வினர் கொண்டு வந்த தீர்மானத்தை, சபாநாயகர் வாசித்து காட்டினார்).
அன்பழகன்: பெங்களூரு கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு விசாரணையின் போது, தமிழக சட்டசபையில் தான் ஓய்வு எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக காரணம் சொல்லியிருக்கிறார்.
ஆற்காடு வீராசாமி: பன்னீர்செல்வம் ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் பேசி விட்டு, தற்போது நிதியமைச்சர் பதிலுரையின் போது, சபையை நடத்தவிடக் கூடாது என்று வேண்டுமென்றே இடையூறு செய்கின்றனர். அவர்களை வெளியேற்ற வேண்டும்.
ஓ.பன்னீர்செல்வம்: ஜெயலலிதாவின் உடல்நிலை குறைவு காரணமாக, இந்த சட்டசபையின் கூட்டத் தொடரில் மட்டும் வர முடியவில்லை என்று காரணம் கூறி தான் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தற்காலிக ஏற்பாடாக அனுமதி கேட்டோம். அதை அரசியலாக்கும் வகையில், ஓய்வெடுக்கும் ஒருவர் என்று அமைச்சர் கூறுகிறார். அந்த வாசகத்தை நீக்க வேண்டும்.
அன்பழகன்: எதிர்க்கட்சித் தலைவரை குறைவாக பேசவில்லை. இந்த சபையில், முதல்வர் இருக்கையில் அவர் அமரும் நிலை வரும் என்றும், ஆளுங்கட்சியினர் எதிர்க்கட்சி இடத்துக்கு வருவர் என்றும் பன்னீர்செல்வம் பேசினார். ஓய்வு எடுப்பவரால் அந்த நிலைக்கு வர முடியு மென்றால், இன்றைக்கு செயல்பட்டுக் கொண்டிருப்பவரால் (முதல்வர்) இந்த நிலையை காப்பாற்ற முடியாதா? என்று தான் சொல்ல வந்தேன்.
ஓ.பன்னீர்செல்வம்: இதே முதல்வர், 2001 முதல் ஐந்து ஆண்டுகளாக சட்டசபையின் உறுப்பின ராக இருந்தார். சபைக்கே வரவில்லை. ஆனால், சட்டசபைக்கு வந்து பல்வேறு வாதங்களில் பேசிய, எதிர்க்கட்சித் தலைவர் ஏன் முதல்வராக வரக்கூடாது.
செங்கோட்டையன்: எதிர்காலத்தில் முழுமையாக ஓய்வு பெறப் போகிறீர்கள்.
சபாநாயகர்: அதெல்லாம் மக்கள் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் எதற்காக பிரச்னை செய்கிறீர்கள்.
செங்கோட்டையன்: நிதியமைச்சர் குறிப்பிட்ட வார்த்தையை நீக்காத சர்வாதிகார ஆட்சியை கண்டித்து, சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்கிறோம்.இவ்வாறு அவர் கூறியதும், அ.தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்தனர்.
நிதியமைச்சர் அன்பழகன்: நிரந்தரமாக இந்த சபைக்கு வரமாட்டோம் என்பதை உறுதிபடுத்தி சென்றுள்ளனர். இந்த சட்டசபையில், அடிக்கடி வெளிநடப்பு செய்து, சபை அமைதியாக நடக்க ஒத்துழைத்ததற்கு நன்றி.
3 அ.தி.மு.க.,வினருக்கு மன்னிப்பு:வெளிநடப்பு செய்யும் போது, சபையை அவமதித்ததாக அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஜெயக்குமார், போஸ், அரி ஆகியோருக்கு சட்டசபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு, பின்னர் மன்னிக்கப்பட்டனர்.அ.தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்த போது, சிலர் இடைக்கால பட்ஜெட்டை கிழித்து எறிந்தனர். இது பற்றி சபாநாயகர் ஆவுடையப்பன் குறிப்பிடும் போது, “”அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஜெயக்குமார், போஸ், அரி ஆகியோர் இடைக்கால பட் ஜெட்டை கிழித்து வீசிச் சென்ற செயல் கண்டிக்கத்தக்கது. இந்த சபையை அவமதிப்பதாகும்,” என்றார்.இதன் பின், துணை முதல்வர் ஸ்டாலின் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அவர் பேசும் போது, “”நிதியமைச்சர் பதிலுரையின் போது, ஜெயக்குமார், போஸ், அரி ஆகியோர் இடைக்கால பட்ஜெட் பிரதியை கிழித்து வீசியது, ஜனநாயகத்துக்கு எதிரானது.இதை இந்த சபை கண்டிக்கிறது. உறுப்பினர்களின் உரிமை மீறிய செயல் இது என்றாலும், மூன்று பேரையும் பெருந்தன்மை யுடன் சபை மன்னிக்கிறது,” என்று குறிப்பிட்டார். பின்னர், இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Leave a Reply