நிர்வாக வாரியத்தை சுருக்குதல், கற்பித்தல் நேரத்தை நிர்ணயித்தல் உள்ளிட்ட பரிந்துரைகளை பெங்களூர், கொல்கத்தா ஐ.ஐ.எம் -கள் நிராகரித்துவிட்டன.
ஐ.ஐ.எம்-ராஞ்சியின் சேர்மன் தலைமையில் 5 பேர் கொண்ட ஒரு கமிட்டியை மத்திய மனிதவளத் துறை நியமித்திருந்தது. அந்த கமிட்டியானது, ஐ.ஐ.எம். கவர்னர் போர்டுகள் மற்றும் சொசைட்டிகளின் அளவை குறைக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு ஐ.ஐ.எம். ஆசிரியரும் வருடத்திற்கு 160 மணி நேரங்கள் கற்பிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தது. ஆனால் இந்த பரிந்துரைகளை பெங்களூர் மற்றும் கொல்கத்தா ஐ.ஐ.எம் -கள் நிராகரித்து விட்டன.
இந்த இரு ஐ.ஐ.எம் -களின் ஆசிரியர் அமைப்புகள், இந்த பரிந்துரையை நிராகரிக்கும் பொருட்டு, ஒருமனதாக தீர்மானம் கொண்டு வந்ததுடன், அவை தவறான தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை என்றும் கூறியுள்ளன. இதுபோன்ற பரிந்துரைகள் ஐ.ஐ.எம் -களின் வளர்ச்சியை தடுப்பதுடன், ஆசிரியர்களின் மனோநிலையில் ஒரு எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் ஐ.ஐ.எம் -களின் நீடித்த மேம்பாட்டிற்கான ஒரு நிர்வாக அமைப்பை உருவாக்க, பழைய மாணவர் மற்றும் புகழ்பெற்ற கல்வியாளர்கள் அடங்கிய ஒரு புதிய குழுவை உருவாக்கவும் அவை வேண்டுகோள் விடுத்துள்ளன.
ஐ.ஐ.எம் -களின் போர்டுகள் மற்றும் சொசைட்டிகளின் அளவை குறைக்க பரிந்துரைத்த அந்த கமிட்டியானது, தொழிலதிபர்களிடம் ரூ.20 கோடியும், தனிநபர்களிடம் ரூ.5 கோடியும், பழைய மாணவரிடம் ரூ.3 கோடியும் பெற்றுக்கொண்டு அவர்களை சொசைட்டிகளின் உறுப்பினர்கள் ஆக்கலாம் என்று கூறியிருந்தது. ஆனால் இந்த பரிந்துரைகள் பொது நலனுக்கு எதிரானவை என்றும், ஐ.ஐ.எம். சொசைட்டிகளில் பங்காற்றுவது என்பது கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டை ஒத்ததாய் இருக்க வேண்டுமே ஒழிய, அவற்றை உரிமையாக்குவதில் இருக்கக்கூடாது என்றும் பெங்களூர்-ஐ.ஐ.எம். ஆசிரியர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த இரு ஐ.ஐ.எம் -களும் கமிட்டி அறிக்கையை நிராகரித்துள்ள நிலையில், மற்ற ஐ.ஐ.எம் -கள் அந்த பரிந்துரைகளைப் பற்றி விரிவாக விவாதிக்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply