மதுரை : “”இந்திய – சீன எல்லையைக் காக்க, துணை ராணுவத்திற்கு அதிகளவு இளைஞர் தேவைப்படுகின்றனர். இதற்காக பல ஆயிரம் பேர் சேர்க்கப்படவுள்ளனர்,” என, மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் இடையபட்டியில் இந்திய – திபெத் எல்லை காவல் படையின் (ஐ.டி.பி.பி., – இந்தோ – திபெத் பார்டர் போலீஸ்) 45வது பட்டாலியன் தலைமையகம் 80 ஏக்கர் பரப்பில், 49 கோடி ரூபாய் மதிப்பில் மூன்று கட்டங்களாக அமையவுள்ளது. இதன் முதல் கட்டப்பணிகள் மூன்று கோடியே 79 லட்ச ரூபாய் மதிப்பில் முடிக்கப்பட்டுள்ளன. இதற்கான திறப்பு விழா மற்றும் இரண்டாம் கட்ட பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
ஐ.டி.பி.பி.,யின் டி.ஜி.பி., பாட்டியா வரவேற்றார். கலெக்டர் சி. காமராஜ் முன்னிலை வகித்தார். இவற்றை திறந்து வைத்து மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசியதாவது: ஐ.டி.பி.பி., வீரர்களின் பணி மிகவும் கடுமையானது. இமயமலையில் 17 ஆயிரம் அடி உயரத்தில் கடும் பணியில் முகாம்கள் அமைத்து எல்லையை காத்து வருகின்றனர். முகாம்களுக்கு செல்ல பாதை இல்லை. வீரர்களுக்கான உணவு, மருந்து போன்றவை ஹெலிகாப்டர் மூலம் வழங்கப்படுகின்றன. மற்ற துணை ராணுவப் படைகளை விட ஐ.டி.பி.பி., பணி மிகவும் கடினமானது.
இந்திய – சீன எல்லை பரந்து விரிந்துள்ளது. எல்லையை காக்க பல ஆயிரம் வீரர்கள் தேவை. ஐ.டி.பி.பி.,யில் பல ஆயிரம் பேர் சேர்க்கப்படவுள்ளனர். இவர்களுக்கு நல்ல சம்பளம், சலுகைகள் வழங்கப்படும். மதுரை இடையபட்டியில் அமைந்துள்ள தென்னிந்திய அளவிலான முதல் தலைமையகத்தில் 779 தமிழர்கள் உட்பட 4,167 பேர் உள்ளனர். இது முன்மாதிரியாக விளங்க வேண்டும். சூரிய ஒளி மூலம் மின் தேவையை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஐ.டி.பி.பி.,யின் ஐ.ஜி., நிதின் அகர்வால் நன்றி கூறினார்.
ஐ.டி.பி.பி.,யின் நன்மை என்ன? : மதுரையில் ஐ.டி.பி.பி., தலைமையகம் அமைந்துள்ளதால் ஏற்படும் நன்மைகள்: இயற்கை சீற்றம், தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தலாம். இனி, வடமாநிலங்களில் இருந்து துணை ராணுவத்தை வரவழைக்க வேண்டிய அவசியம் இருக்காது. தென்மாநில அளவில் தலைமையகம் என்பதால், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திராவைச் சேர்ந்த வீரர்கள் ஓய்வு காலங்களை தங்களின் இல்லங்களில் கழிக்கலாம்.
Leave a Reply