தேர்தலை நினைத்தால் திமுகவுக்கு ‘புளியை’ கரைக்கிறது-அதிமுக

posted in: அரசியல் | 0

சென்னை: வரும் தேர்தலை நினைத்தால் திமுகவுக்கு ‘புளியை’ கரைக்கிறது என்று அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் சட்டசபையில் கூறினார்.

தமிழக இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்கியது. அதன் விவரம்:

அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக): இந்த பட்ஜெட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை. விலைவாசி உயர்வை சுட்டிக் காட்டினால் அமைச்சர் புள்ளி விவரத்தை கூறுகிறார். இது எங்களுக்கு புரியவில்லை.

உணவுத்துறை அமைச்சர் வேலு: அதிமுக ஆட்சியில் ஜனவரி மாதம் ஒரு கிலோ புளி ரூ.22க்கு விற்றது. அவர்களது ஆட்சியில் அதே அக்டோபர் மாதத்தில் ஒரு கிலோ புளி ரூ.45க்கு விற்கப்பட்டுள்ளது. எனவே விலை ஏற்றம், இறக்கம் அவ்வப்போது நடைபெறுவதுதான். இன்று காய்கறிகளின் விலை குறைந்து விட்டது.

செங்கோட்டையன் (அதிமுக): புளி விலையை அமைச்சர் எடுத்து சொன்னார். வருகிற தேர்தலை எண்ணி திமுகவுக்கு ‘புளியை’ கரைக்கிறது.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி: அத்தியாவசிய பொருள் விலை மட்டும் உயரவில்லை. சிமெண்ட், மணல், கம்பி விலையும் உயர்ந்து விட்டது. அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகம் இப்போது அமளிக்காடாக காட்சி அளிக்கிறது. தினமும் கொலை, கொள்ளை, வழிப்பறி, கடத்தல் நடக்கிறது. காவல்துறை செயல்படுகிறதா? என்றே சந்தேகம் எழுகிறது. பொதுமக்களுக்கு ஆபத்து என்றால் காவல்துறையில் முறையிடலாம். ஆனால் காவல்துறைக்கே ஆபத்து என்றால் யாரிடம் முறையிடுவது?

(தொடர்நது முதல்வர் குறித்து அவர் சில வார்த்தைகளைக் கூற, அதற்கு அமைச்சர் பொன்முடி கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, அந்த வார்த்தைகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன)

முல்லை வேந்தன் (திமுக): அதிமுக ஆட்சியில் டெஸ்மா, எஸ்மா சட்டம் கொண்டு வந்ததோடு பணி நியமனத் தடை சட்டமும் வந்தன. இதனால் பலர் வேலையின்றி தவித்தனர். இப்போது திமுக ஆட்சியில் 5 லட்சம் பேருக்கு வேலை வழங்கியவர் முதல்வர் கருணாநிதி .

செங்கோட்டையன் (அதிமுக): திருப்பூர், கரூர், கோவையில் மின்வெட்டால் 10 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.

பொன்முடி: இது எங்கள் தவறல்ல. நீதிமன்றத் தீர்ப்பால் நடந்துள்ளது. இன்றைக்கு தமிழ்நாட்டில் கூலிக்கு ஆள் கிடைக்காத நிலைதான் உள்ளது. அனைவரின் வருமானமும் உயர்ந்துள்ளது.

முல்லை வேந்தன் (திமுக): அதிமுக ஆட்சியில் நடந்ததை மனதில் வைத்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசி விட்டு கடைசியில் திமுக ஆட்சியில் நடந்ததுபோல் சொல்கிறார். சட்டம் – ஒழுங்கு பற்றி பேசினார். சுப்பிரமணிய சாமிக்கு கோர்ட்டில் நீங்கள் எப்படி எதிர்ப்பு தெரிவித்தீர்கள் என்பது நாட்டுக்கு தெரியும். ரூ.100 கோடி செலவில் நடந்த திருமணமும் நாட்டுக்கு தெரியும். கும்பகோணம் மகாமகம், 3 கல்லூரி மாணவிகள் எரிப்பு… இப்படி எத்தனையோ கொடுமைகளை சொல்லிக் கொண்டே போகலாம். இனி கோட்டைக்குள் நுழையப் போவதில்லை.

செங்கோட்டையன்: சுப்பிரமணிய சாமிக்கு கறுப்பு கொடி காட்டியதை கூறினார். பிரதமர் இந்திராகாந்திக்கு நீங்கள் கறுப்பு கொடி காட்டியபோது நடந்ததை நாடே அறியும்.

அமைச்சர் துரைமுருகன்: நாங்கள் கறுப்பு கொடி காட்டியது அரசியலுக்காக. ஆனால் நீங்கள் சுப்பிரமணிய சாமியை அவமானப்படுத்தினீர்கள். இதுதான் வித்தியாசம்.

இதைத் தொடர்ந்து முல்லைவேந்தன் பேசிய வார்த்தைகளுக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர், அதை அவைக் குறிப்பில் இருந்து நீக்கக் கோரினர். இதையடுத்து திமுக-அதிமுக எம்எல்ஏக்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து முல்லைவேந்தன் பேசிய சில வார்த்தைகள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.

இதையடுத்து அவையில் அமைதி திரும்பியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *