நாகை அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், செருதூர் மற்றும் காரைக்காலை சேர்ந்த 106 மீனவர்கள் 18 படகுகளில் கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இலங்கையில் எல்லைப்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த அவர்களை இலங்கை மீனவர்கள் சுற்றி வளைத்து சிறைபிடித்தனர். பின்னர் அவர்களை இலங்கை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து இலங்கையில் சிறையில் அடைக்கப்பட்ட புதுக்கோட்டை, ராமேஸ்வரம் உள்பட 136 பேரை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து கடந்த 18- ந் தேதி அன்று அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் மீனவர்கள் அனைவரும் ஊர் திரும்பினர்.
இந்த நிலையில் நேற்று நாகை அக்கரைப்பேட்டையில் நாகை தாலுகா மீனவர்கள் மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-
இலங்கையில் வாழும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு இன்றிலிருந்து (நேற்று) நாகை தாலுகா மற்றும் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த விசைப்படகுகள் எதுவும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடிக்க செல்லக்கூடாது.
மீறி சென்று பிடிப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட விசைப்படகு, மாருதி கட்டுமரம் மற்றும் கட்டுமரத்திற்கு அபராதமாக, அன்று கொண்டுவந்து விற்பனை செய்யும் மீன்களின் தொகை முழுவதையும் சம்பந்தப்பட்ட கிராமத்திடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட விசைப்படகு ஒரு மாதம் தொழில் செய்ய கூடாது.
தற்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நாகை மற்றும் காரைக்கால் மீனவர்களை உடனடியாக மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொண்ட மத்திய, மாநில அரசுகளுக்கும், அரசியல் கட்சியினருக்கும், அனைத்து அமைப்பினருக்கும் நாகை தாலுகா மற்றும் காரைக்கால் மாவட்ட கிராமங்களின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்வது.
இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையேயான தென்தூர பகுதியில் தமிழகத்தை சேர்ந்த விசைப்படகு, மாருதி கட்டுமரம் மற்றும் கட்டுமரம் ஆகியவற்றால் மீன்பிடிப்பது தொடர்பாக அரசு அமைக்கும் குழுவில் மீனவ பிரதிநிதிகளை இடம் பெற செய்ய வேண்டும்.
நாகை தாலுகா மற்றும் காரைக்கால் மாவட்ட விசைப்படகு, மாருதி கட்டுமரம் மற்றும் கட்டுமரம் தமிழக எல்லையை தாண்டி சென்று மீன்பிடிக்கும் பட்சத்தில் இலங்கை மீனவர்களாலோ, இலங்கை கடற்படையினாலோ கைது செய்யப்பட்டு மீட்கப்பட்டு வரும் பட்சத்தில் அவர்களுக்கு ஒரு மாதம் மறியல் செய்வது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Leave a Reply