மதுரை: தனித்துப் போட்டியிடுவோம், விஜய்காந்துடன் கூட்டணி அமைந்தால் நல்லது, எல்லா எதிர்க் கட்சிகளும் கூட்டாக திமுகவை எதிர்த்துப் போட்டியிட வேண்டும் என்று ‘பல குரல் மன்னன்’ போல பேசி வரும் பாஜக இப்போது தன்னை அதிமுக கூட்டணியில் சேர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற வேண்டும் என்றால், அ.தி.மு.க. கூட்டணியில் பாஜக இடம் பெற வேண்டும் என்று அக் கட்சியின் முன்னாள் தேசிய தலைவரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பங்காரு லட்சுமணன் கூறியுள்ளார்.
மதுரையில், பாஜக 20 மாவட்ட சட்டசபை தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் அவர் பேசுகையில்,
வரும் சட்டசபை தேர்தலில் ஊழல் முக்கிய பிரச்சனை இருக்கும். ஸ்பெக்ட்ரம் ஊழலைத் தொடர்ந்து, மீண்டும் ஒரு மெகா ஊழல் வெளியாகியுள்ளது. விலைவாசி உயர்வுக்கும், ஊழலுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது.
விலைவாசி உயர்வுக்கு யூக பேர வணிகமே காரணம். தற்போதைய நிலையில் விலைவாசி கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கான அறிகுறிகள் இல்லை.
60 ஆண்டுகளில் எந்த அரசிலும் இல்லாத அளவுக்கு, தற்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசில் அதிக பட்ச ஊழல்கள் நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கான சிறப்பு நிதியை பயன்படுத்தி, இலவச கலர் டிவி ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்குகின்றனர். இதைக் கண்டித்து சேலத்தில் பாஜக சார்பில் கண்டன பேரணி நடைபெறும்.
தி.மு.கவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒரு அணியில் திரள வேண்டும் என்று பா.ஜ.க. விரும்புகிறது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி மாற வேண்டும் என அதிமுக நினைத்தால், அதற்காக பா.ஜ.கவுடன் கூட்டணி அமைக்க வேண்டும். அ.தி.மு.க. கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்தாலும் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.
யாருமே எங்களை கூட்டணியில் சேர்க்காவிட்டால் தனித்துப் போட்டியிடவும் தயார் என்றார்.
Leave a Reply