நாட்டை விட்டு ஓடினேனா? அதிபர் கடாபி திட்டவட்ட மறுப்பு

posted in: உலகம் | 0

டிரிபோலி: லிபியாவில் எதிர்ப்பாளர்கள் மீது நேற்றும், போர்விமானங்கள் மூலம் குண்டு வீசித் தாக்குதல் நடந்தது.

இந்நிலையில், கடாபி நாட்டை விட்டு ஓடிவிட்டதாக வெளி வந்த செய்தியை மறுக்கும் விதத்தில், நேற்று திடீர் பேட்டியளித்த கடாபி,”நான் டிரிபோலியில் தான் உள்ளேன்; நாய் போன்று அலையும் “டிவி’ க்களின் செய்திகளை நம்ப வேண்டாம்’ என்று கூறியுள்ளார்.லிபியாவின் பல நகரங்களில் கடாபி எதிர்ப்பு போராட்டங்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. தலைநகர் டிரிபோலி, கிழக்கு நகரமான பெங்காசி உள்ளிட்ட, பல்வேறு நகரங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம், டிரிபோலியில் உள்ள பொதுமக்கள் காங்கிரஸ் எனப்படும் லிபியா பார்லிமென்ட் தீக்கிரையாக்கப்பட்டது. பல நகரங்களில் அரசு அலுவலகங்களுக்கும் இதே கதி ஏற்பட்டது.போர் விமானம் மூலம் தாக்குதல்:இந்நிலையில் நேற்று முன்தினம் டிரிபோலியின் புறநகர்ப் பகுதியான பசுலும் மற்றும் டஜுரா மாவட்டங்களில், வீதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்கள் மீது, போர்விமானங்களும், ராணுவ ஹெலிகாப்டர்களும் சரமாரியாகக் குண்டு வீசிக் கொன்றன. கடாபி ஆதரவாளர்களும் கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளினர்.இச்சம்பவத்தில் 61 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒன்பது நாள் போராட்டத்தில் இதுவரை 400 க்கும் அதிகமானோர் பலியாகியிருக்கக் கூடும் என்று மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன.

டிரிபோலியில் நேற்றும் போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதாக, செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தகவலை இந்தியாவுக்கான லிபியா தூதராக இருந்து, தற்போது ராஜினாமா செய்து விட்ட அலி எல் எஸ்ஸாவி உறுதிப்படுத்தினார்.மேலும் துப்பாக்கிச் சூடு, ஆப்ரிக்கக் கூலிப் படையினரைப் பயன்படுத்தல் ஆகியவற்றின் மூலம் லிபியா அரசு தனது மக்களைக் கொன்று வருவதாகத் தெரிவித்தார். அதேபோல, ஐ.நா.,வுக்கான லிபியா தூதர் இப்ராகிம் டப்பாசியும்,”லிபியாவில் மனிதப் படுகொலையை ஆரம்பித்து விட்டார் கடாபி’ என்று கூறினார்.ஆனால், கடாபியின் மகன் சயீப் அல் இஸ்லாம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “பயங்கரவாதிகளின் ஆயுதக் கிடங்குகளை தான் போர் விமானங்கள் தாக்கின. குடியிருப்புகள் மீது தாக்குதல் நடக்கவில்லை. அதேபோல் டிரிபோலியிலும் பெங்காசியிலும் விமானத் தாக்குதல் நடக்கவில்லை’ என்று மறுத்தார்.

பெங்காசி நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது விமானத் தாக்குதல் நடத்தும்படி, இரு விமானப் படைத் தளபதிகளுக்கு ராணுவம் உத்தரவிட்டது. அதேநேரம், பெங்காசி விமானப் படைத் தளத்தை மக்களும் கைப்பற்றிக் கொண்டதால், வேறு வழியின்றி அந்த இரு விமானப் படைத் தளபதிகளும், ஒரு போர் விமானத்தில் ஏறி, மக்கள் மீது தாக்குதல் நடத்த விரும்பாமல், மத்திய தரைக்கடலில் அமைந்துள்ள தீவு நாடான மால்டாவில் தரையிறங்கினர்.அங்கிருந்த போலீசார் அவர்களைக் கைது செய்து விசாரித்த போது, இத்தகவல் வெளியானது. இதன் மூலம் சயீப்பின் மறுப்பு பொய் என்பது தெரியவந்துள்ளது.

கடாபி காட்டம்:இந்நிலையில், லிபியா தலைவர் மும்மர் கடாபி, வெனிசுலா நாட்டுக்கு ஓடிப் போய்விட்டதாக பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹாக் நேற்று முன்தினம் தெரிவித்தார். இதையே சீனாவுக்கான லிபியாவின் துணைத் தூதர் முஸ்ரதியும் தெரிவித்திருந்தார்.ஆனால், நேற்று டிரிபோலியில் உள்ள தனது வீட்டின் முன் ஒரு வேனில் உட்கார்ந்தபடி, அரசு “டிவி’க்குத் திடீர் பேட்டி கொடுத்த கடாபி,”நான் இன்னும் டிரிபோலியில் தான் இருக்கிறேன். நாய் போலத் திரியும் “டிவி’ செய்திகளை நம்ப வேண்டாம்’ என்று மறுப்பு தெரிவித்தார்.பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள வெனிசுலா தூதரகமும் இதை மறுத்துள்ளது.

பெங்காசி வீழ்ந்தது:லிபியாவின் கிழக்கு நகரமான பெங்காசி தற்போது மக்களின் கைகளுக்கு வந்து விட்டதாகவும், அங்கிருந்த ராணுவப் படைத் தளங்களை மக்கள் கைப்பற்றி விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.இதை உறுதிப்படுத்தும் விதத்தில், பெங்காசியில் உள்ள விமான ஓடுதளம் மக்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு விமானங்கள் இறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல், டிரிபோலியில் உள்ள விமான நிலையமும் இழுத்து மூடப்பட்டு விட்டது. இதனால் லிபியாவில் உள்ள இந்தியர் உள்ளிட்ட வெளிநாட்டவர்களின் மீட்பில் சிரமம் ஏற்பட்டுள்ளது.சிட்ரே, டொப்ருக், மிஸ்ரட்டா, கோம்ஸ், டர்கவுனா, ஜென்டன், அல் ஜாவியா மற்றும் ஜவாரா ஆகிய நகரங்களையும் மக்கள் கைப்பற்றி விட்டனர்.எகிப்து – லிபியா எல்லையில் இருந்த லிபியா ராணுவ வீரர்கள் அங்கிருந்து சென்று விட்டதால், எகிப்து எல்லையில் அந்நாட்டு ராணுவம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

கடாபி மீது விசாரணை:லிபியாவில் நடந்த படுகொலைகள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா.,வின் மனித உரிமைப் பிரிவுத் தலைவர் நவிபிள்ளை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,”மனித இனத்திற்கு எதிரான குற்றத்தில் லிபியா அரசு ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். மக்கள் மீது இயந்திரத் துப்பாக்கிகள், போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்துவதை லிபியா அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

லிபியா கலவரத்தில் தமிழர் ஒருவர் பலி:லிபியாவில் நடந்து வரும் கலவரத்தில், அங்குள்ள 18 ஆயிரம் இந்தியர்கள் பத்திரமாக இருப்பதாக, இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில், லிபியாவில் நடந்த போராட்டத்தில் சிக்கி, நெல்லை மாவட்டம், புளியங்குடி அருகேயுள்ள தலைவன் கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகையா பாண்டியன் என்பவர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இச்செய்தி அறிந்த அவரது குடும்பத்தினர், நெல்லை மாவட்ட கலெக்டரிடம் நேற்று, அவரது உடலையும், பிற தமிழர்களையும் மீட்டுக் கொண்டு வரும்படி கோரி மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *