வரலாற்று புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகம் வரும் 2013 ம் ஆண்டு முதல் மீண்டும் செயல்படத் தொடங்கும்.
துருக்கிய காட்டுமிராண்டியான பக்தியார் கில்ஜியால் அழிக்கப்பட்ட உலகின் பழமையான பல்கலைக்கழகமான நாளந்தா பல்கலைக்கழகத்தை மீண்டும் அதே இடத்தில் மறு நிர்மாணம் செய்யும் முயற்சியில் இந்தியா, சீனா, கொரியா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளன என்பது நாம் அறிந்ததே.
தற்போது அந்த பல்கலையானது வரும் 2013 ம் ஆண்டு முதல் செயல்படத் துவங்கும் என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பீகார் மாநில அரசு, பழைய பல்கலை இருந்த இடத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் ராஜ்கிர் என்ற இடத்தில் 446 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது. இங்கேதான் புதிய நாளந்தா வளாகம் அமைய உள்ளது.
மேலும் புதிய பல்கலை வளாகத்தை அமைப்பதற்கான கட்டிட வடிவமைப்பை உருவாக்குவதற்கான உலகளாவிய போட்டி இன்னும் 3 அல்லது 4 மாதங்களுக்குள் அறிவிக்கப்பட்டு, கூடிய விரைவில் கட்டிடப் பணிகள் துவங்கும் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச தரத்தில் அமைய உள்ள இந்த பல்கலையில், மொத்தம் 6 பிரிவுகளில் முதுநிலை பட்டப் படிப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இங்கே நடைபெற உள்ள படிப்புகளானது, பவுத்த ஆய்வுகள், தத்துவம் மற்றும் மதங்களுக்கு இடையிலான ஒப்பீடு, வரலாற்று படிப்புகள், சர்வதேச உறவுகள் மற்றும் அமைதி படிப்புகள், பொது கொள்கை மற்றும் மேம்பாட்டு ஆய்வுகள் தொடர்பான வணிக மேலாண்மை படிப்பு, மொழிகள் மற்றும் இலக்கியம் மற்றும் சூழல் ஆய்வியல் மற்றும் சுற்றுசூழல் படிப்புகள்.
பவுத்த ஆய்வுகள், மதங்களுக்கு இடையிலான ஒப்பீட்டு படிப்புகள், வரலாறு மற்றும் இலக்கிய படிப்புகள் இந்த பல்கலையை அதன் கடந்த காலத்துடன் இணைக்கும். இதைத்தவிர வருங்காலத்தில் வானியல் சம்பந்தமான படிப்புகளும் அறிமுகப்படுத்தப்படும். மேலும் முறையான ஆய்வகம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்ட பிறகு, அறிவியல் சம்பந்தமான படிப்புகளும் தொடங்கப்படும்.
இந்திய அரசு இந்த பல்கலை கட்டுமான பணிக்காக ஒரு அறக்கொடை நிதி அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிங்கப்பூர், சீனா, ஆஸ்திரேலியா மற்றும் லாவோஸ் போன்ற பல நாடுகளிலிருந்து நிதி உதவிகள் வந்தவண்ணம் உள்ளன.
Leave a Reply