நிர்வாணப்படுத்தி சோதனையிட்டதால் மாணவி தற்கொலை-கைதான பேராசிரியைகளுக்கு நெஞ்சு வலி

posted in: மற்றவை | 0

சென்னை: சக மாணவியிடமிருந்து ரூ. 4000 பணத்தைத் திருடியதாக கூறி மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவியின் உடைகளைக் களைந்து சோதனையிட்டதால் அவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக 4 ஆசிரியைகள் கைது செய்யப்பட்டனர். ஆனால் நான்கு பேருக்கும் ஒரே நேரத்தில் நெஞ்சு வலி வந்ததால் நால்வரையும் மருத்துவமனையில் சேர்த்தனர் போலீஸார்.

சென்னை பெசன்ட்நகர், ஆல்காட்குப்பத்தை சேர்ந்தவர் கனகலிங்கம் (55). இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி பெயர் சாந்தி (50). இவர் பெசன்ட்நகர் ராஜாஜிபவன் மத்திய அரசு அலுவலகத்தில் துப்புறவுத் தொழிலாளியாக பணியாற்றினார். இவர்களது மூத்த மகள் திவ்யா (20).

தி்வ்யா, அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்.-ஜானகி (முன்னாள் சத்யா ஸ்டூடியோ வளாகத்தில் உள்ளது) மகளிர் கல்லூரியில் பிகாம் 2வது ஆண்டு படித்து வந்தார். மிக மிக ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் திவ்யா. குடிசை வீட்டில் வசித்து வந்தார்.

நன்கு படிக்கக் கூடிய மாணவியான அவர் வகுப்பில் முதல் மாணவியாகவும் திகழ்ந்துள்ளார். இந்த நிலையில், கடந்த மாதம் 29-ந் தேதி அன்று திவ்யாவோடு படிக்கும் சக மாணவியின் ரூ.4 ஆயிரம் பணம் திருட்டு போய்விட்டது. வகுப்பறையிலேயே இந்த திருட்டு நடந்ததால் ஆசிரியைகள் விசாரணை நடத்தினார்கள். மாணவி திவ்யா மீதும் சந்தேகப்பட்டு, ஆசிரியைகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதையடுத்து அன்று மாலை கல்லூரியிலிருந்து வீடு திரும்பிய திவ்யா, தனது தாயாரிடம் கதறி அழுதுள்ளார். ரூ.4 ஆயிரம் பணம் திருடியதாக திருட்டு பட்டம் கட்டி, எனது ஆடைகளை கழற்றி நிர்வாணப்படுத்தி, ஆசிரியைகள் கல்லூரியில் அவமானப்படுத்திவிட்டார்கள். மற்ற மாணவிகள் என்னை கேலியாக பார்க்கிறார்கள். இனிமேல் எந்த முகத்தோடு நான் கல்லூரிக்கு போவேன் என்று கூறி அழுதுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த திவ்யாவின் தாயார், மகளைத் தேற்றி ஆறுதல் கூறியுள்ளார். அக்கம்பக்கத்தினரும் ஆறுதல் கூறியுள்ளனர். கல்லூரிக்கு வந்து நியாயம் கேட்பதாகவும் கூறியுள்ளனர்.

ஆனால் அதை நிராகரித்த திவ்யா, யாரும் கல்லூரிக்கு வர வேண்டாம். மார்க்கில் கை வைத்து விடுவார்கள் என்று கூறி பயந்துள்ளார். இந்த நிலையில், திங்கள்கிழமை கல்லூரிக்கு வழக்கம் போல போனார் திவ்யா. அன்றும் அழுதபடி திரும்பினார்.

இந்த நிலையில், திவ்யாவின் தந்தை கனகலிங்கத்துக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரைப் பார்த்துக் கொள்ள மனைவி சாந்தி உடன் இருந்தார்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை கல்லூரியிலிருந்து திவ்யா தனது வீட்டுக்குள் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மருத்துவமனையிலிருந்து இரவு வீடு திரும்பிய சாந்தி இதைப் பார்த்து அலறினார். அக்கம்பக்கத்தினர் திரண்டனர். குப்பமே அதிர்ச்சியில் மூழ்கியது.

போலீஸார் விரைந்து வந்து மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பரிசோதனைக்குப் பின்னர் மாணவியின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் போலீஸ் பாதுகாப்போடு உடல் தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக திவ்யாவின் குடும்பத்தார், உறவினர்கள், ஆல்காட் குப்பத்தில் வசிக்கும் மீனவ சமுதாயத்தினர் திரண்டு வந்து கல்லூரியை முற்றுகையிட்டு பெரும் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட ஆசிரியைகளைக் கைது செய்யக் கோரி அவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். மாணவி திவ்யா படித்து வந்த வகுப்பு மாணவிகளும் விசாரிக்கப்பட்டனர். அதன் பின்னர் பேராசிரியை ஜெயலட்சுமி, உதவி பேராசிரியைகள் விஜயலட்சுமி, சுதா, செல்வி ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர். அவர்களை கோர்ட்டில் நிறுத்தினர். நால்வரையும் 15 நாள் சிறைக் காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது.

இதையடுத்து நால்வரையும் கோர்ட்டுக்கு போலீஸார் கொண்டு சென்றனர். அப்போது நான்கு பேரும் நெஞ்சு வலிப்பதாக கூறவே உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கல்லூரியில் பதட்டம் நிலவுவதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கல்லூரிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டிருந்தது. தற்போது மேலும் 2 நாட்களுக்கு அதாவது நாளை வரை விடுமுறை விடப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *