சென்னை:”நிலத்தடி நீர் தொடர்பான சட்டத்தை அமலுக்கு கொண்டு வரும் வரை, தமிழகத்தில் நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்ய, அரசு அனுமதிக்கக் கூடாது’ என, சென்னை ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
புது திருப்பூர் பகுதி வளர்ச்சி கழகம் தாக்கல் செய்த அப்பீல் மனுவை விசாரித்த, நீதிபதிகள் தர்மாராவ், அரிபரந்தாமன் அடங்கிய “டிவிஷன் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு:இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது, தமிழ்நாடு நிலத்தடி நீர் மேம்பாட்டு மற்றும் மேலாண்மை சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக அரசிடம் விளக்கம் பெறுமாறு, கூடுதல் அரசு பிளீடரிடம் “டிவிஷன் பெஞ்ச்’ உத்தரவிட்டிருந்தது. மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பொதுப்பணித் துறை செயலரின் கடிதம் தாக்கல் செய்யப்பட்டது.அதில், விவசாய துறையை ஊக்குவிக்கவும், விவசாயிகளின் சமூக பொருளாதார நிலையை ஊக்குவிக்கவும், சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வர அரசு பரிசீலிக்கிறது என கூறப்பட்டுள்ளது.
கடந்த 2003ம் ஆண்டு நிலத்தடி நீர் மேம்பாட்டு மற்றும் மேலாண்மை சட்டம் கொண்டு வரப்பட்டது. ஏழு ஆண்டுகள் முடிந்தும், சட்டத்தை அமல்படுத்த அரசு அறிவிப்பாணையை வெளியிடவில்லை.சட்டம் குறித்து அறிவிப்பாணையை வெளியிடாதது குறித்து, அரசிடம் அறிக்கை கேட்டும், சட்டத்தை அமல்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வர்த்தக நோக்கில் பயன்படுத்துவோரிடம் இருந்து நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும். விவசாயத்துக்கு மட்டுமல்லாமல், குடிப்பதற்கும் தண்ணீர் கிடைக்காமல் பலர் அவதிப்படுகின்றனர். பொது நலன் முக்கியம். எனவே, நிலத்தடி நீர் மேம்பாட்டு மற்றும் மேலாண்மை சட்டம் தொடர்பான அறிவிப்பாணையை பிறப்பிக்கும் வரை, நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்ய யாரையும் அரசு அனுமதிக்கக் கூடாது. இந்த வழக்கு விசாரணை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு “டிவிஷன் பெஞ்ச்’ உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் தாலுகாவில் ஆண்டிப்பாளையத்தைச் சேர்ந்த பூமணி, வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் தாக்கல் செய்த மனுக்களில், “எங்களுக்குரிய திறந்தவெளி கிணறு மற்றும் ஆழ் துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து, திருப்பூர் மற்றும் பல்லடம் பகுதிக்கு கொண்டு செல்வதில் குறுக்கீடு செய்யக் கூடாது என, திருப்பூர் ஆர்.டி.ஓ., போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியுள்ளனர்.இந்த வழக்கில் தங்களையும் சேர்க்கக் கோரி புது திருப்பூர் பகுதி வளர்ச்சி கழகம் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. மனுதாரர்கள் கோரிய நிவாரணத்தையும் வழங்கியது. இதையடுத்து, ஐகோர்ட் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, புது திருப்பூர் பகுதி வளர்ச்சிக் கழகம் அப்பீல் மனுவைத் தாக்கல் செய்தது.
Leave a Reply