பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்ட மாணவர்கள், மீண்டும் பள்ளியில் சேர தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக பள்ளி கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
நாகப்பட்டினம் வந்த தமிழக பள்ளி கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி ஆகிய 6 மாவட்டங்களின் முதன்மை கல்வி அதிகாரிகளுடன் மாநில அரசின் பல கல்வி மேம்பாட்டு திட்டங்கள் பற்றி ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு நிருபர்களிடம் பேசிய அமைச்சர், பள்ளி படிப்பை கைவிட்ட மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கவும், படிப்பை கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் பேசிய அமைச்சர், “மாநிலம் முழுவதும் படிப்பை கைவிட்ட மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி அதிக ஆர்வம் கொண்டுள்ளார். எனவே அவரின் ஆசையை நிறைவேற்றவும், கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் பாலம்(பிரிட்ஜ்) பள்ளிகளை அமைத்தல், புதிய ஆரம்ப பள்ளிகளை அமைத்தல் மற்றும் இருக்கும் பள்ளிகளை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட உள்ளன.
பாலம் பள்ளிகள் என்பவை முக்கியமாக நரிக்குறவர் மற்றும் மிகவும் நலிந்த நிலையிலுள்ள மக்கள் வாழும் பகுதிகளில் ஏற்படுத்தப்படும். அந்த சமூக குழந்தைகள் இந்த பள்ளிகளில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு உணவு உள்ளிட்ட முக்கிய வசதிகள் செய்து தரப்படும். இந்த பாலம் பள்ளிகளில் ஒரு வருடம் படித்து அடிப்படை விஷயங்களை கற்ற பிறகு, அந்த குழந்தைகள் வழக்கமான பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள்” என்றார்.
மேலும், நாகப்பட்டினம் அருகே கீழக்கரை இருப்பு என்ற ஊரில் அமைக்கப்பட்டுள்ள பாலம் பள்ளியில் 103 நரிக்குறவர் இன குழந்தைகள் படிப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், மேற்கூறிய 6 மாவட்டங்களின் முதன்மை கல்வி அதிகாரிகளுடைய செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Leave a Reply