பருவ நிலை மாற்றத்தால் உற்பத்தி குறைகிறது: 2020ல் உணவு பற்றாக்குறை ஏற்படுமா?

posted in: மற்றவை | 0

உலக அளவில், தற்போதுள்ள பருவநிலை தொடர்ந்தால், வரும் 2020ல் இந்தியாவின், உணவு பொருள் உற்பத்தி 30 சதவீதம் வீழ்ச்சி அடையும் என, சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.

இந்தியாவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விவசாயம் உள்ளது. நம் நாட்டில் நெல், கோதுமை, கரும்பு, எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், பருத்தி, கேழ்வரகு, தேயிலை, காபி, தேங்காய் உள்ளிட்டவை அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை தவிர, முந்திரி, ரப்பர், வெங்காயம், மா, வாழை, சப்போட்டா போன்றவைகளும் முக்கிய உணவு உற்பத்தி பொருள்களாக உள்ளன.நாட்டில் வாழும் 65 சதவீத மக்கள், விவசாயத்தையே தொழிலாக கொண்டுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில், நாட்டின் விவசாய உற்பத்தி அதிகரித்து வருகிறது. விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்பின் மூலம் கிடைக்கும் பால் உற்பத்தியில் இந்தியா உலகிலேயே முதலிடத்தை பெற்றுள்ளது. பழங்கள், காய்கறிகள் உற்பத்தியில் இரண்டாமிடம் வகிக்கிறது.

பெரும்பாலான விவசாயிகள், பருவமழையை சார்ந்து தான் விவசாயம் செய்கின்றனர். விவசாயம் மேம்பட, வானிலை குறித்த தகவல்கள் அவசியமாகின்றன. இன்றைய நிலையில், வானிலை குறித்த தகவல்களை அறிந்து கொள்ள வானிலை ஆராய்ச்சி நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுகின்றன.இந்தியாவின் கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள் வெவ்வேறு நிலையிலான வானிலையை கொண்டுள்ளன. இந்நிலையில், வானிலை ஆய்வு மையங்கள் தரும் அறிக்கைகளே விவசாயத்திற்கும், பயிர் உற்பத்திக்கும் முக்கியமானதாக உள்ளது.நாட்டின் மொத்த மக்கள் தொகை, 120 கோடியை எட்டியுள்ள நிலையில், தற்போதுள்ள உணவு உற்பத்தி போதுமானதாக இல்லை.

விவசாயத்தை மேம்படுத்தி, உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என, சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ள நிலையில், வரும் 2020ல் நாட்டின் உணவு உற்பத்தி 30 சதவீத அளவிற்கு குறையும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், சர்வதேச அளவில் ஏற்படும் வானிலை மாற்றம் காரணமாக நாட்டின் விவசாய உற்பத்தி குறையும். இன்றைய நிலையில், அதிகளவு, கார்பன்டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு உள்ளிட்ட நச்சு வாயுகள் அதிகரித்து வருகின்றன.இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, உலகின் வெப்பநிலை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால், வரும் 2020ல் பூமியின் வெப்பநிலை இப்போது இருப்பதை விட, 2.4 டிகிரி செல்சியஸ் உயரும் என்று விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

பருவ நிலை மாற்றத்தால், ஒவ்வொரு நிலப்பரப்பிலும் ஒவ்வொரு விதமான மாறுதல்கள் தோன்றுகின்றன. கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்த பகுதிகள் பாதிப்படையாதவையாகவும், மத்திய மற்றும் தென்பகுதிகள் பாதிப்புகள் அடைபவைகளாகவும் உள்ளன.இந்நிலையில், உலக அளவில் அதிகரித்து வரும் வெப்பநிலை குறித்து சர்வதேச சுற்றுச்சூழல் நிதியம் ஆய்வு செய்தது.

அதில், “சுற்றுச்சூழல் பாதிப்பால் அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக, உணவு பொருட்கள் உற்பத்தி செய்வதில் பெரிய மாற்றம் ஏற்படும். இந்தியாவிலும் பருவ நிலையில் மாறுபாடுகள் ஏற்படும். வெப்பத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக மாறி விடும்.இதனால், அடுத்து வரும் 10 ஆண்டுகளில், இந்தியாவில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் கோதுமை, அரிசி உள்ளிட்ட உணவு பொருள் உற்பத்தியில், 30 சதவீதம் வீழ்ச்சி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலை ஏற்படாமல் இருக்க, உலகில் உள்ள எல்லா நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக உலகில் உணவு உற்பத்தியை வெகுவாக பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *