பழி தீர்த்தது இந்தியா: 87 ரன்கள் வித்யாசத்தில் அபார வெற்றி

மிர்பூர்: உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 87 ரன்கள் வித்யாசத்தில் அபாரமாக வென்றது.

இந்த ஆட்டத்தில் வீரேந்திர ஷேவாக் அதிரடியாக 175 ரன்கள் எடுத்தார். விராட் கோஹ்லி ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் அடித்தார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா- வங்காளதேச அணிகள் நேற்று மோதின. மிர்பூர் நேஷனல் ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் பீல்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணியில் சச்சின் தெண்டுல்கர், ஷேவாக், கம்பீர், வீரட் கோக்லி, யுவ்ராஜ் சிங், தோனி, யூசுப் பதான், ஹர்பஜன் சிங், ஸ்ரீசந்த், ஜாகீர்கான், முனாப் பட்டேல் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ரெய்னா சேர்க்கப்படவில்லை.

3 வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேவாக்கும், தெண்டுல்கரும் களம் இறங்கினர். முதல் ஓவரை ஷேவாக் சந்தித்தார். முதல் பந்திலே பவுண்டரியுடன் ரன் கணக்கைத் துவக்கினார். ஷேவாக்கும் தெண்டுல்கரும் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர்.

இதனால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இந்தியா 8.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்னை தொட்டது. சிறப்பாக விளையாடிய சச்சின் 28 ரன்னில் ரன் அவுட்ஆனார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 69 ஆக இருந்தது.

அடுத்து ஷேவாக்குடன் கம்பீர் ஜோடி சேர்ந்தார். ஷேவாக் சிறப்பாக விளையாடி 45 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்தியா 14.3 ஓவரில் 100 ரன்களைத் தொட்டது. கம்பீர் 33 ரன்கள் எடுத்திருக்கும்போது அவுட் ஆனார். அப்போது இந்தியா 23.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 152 ரன் எடுத்திருந்தது.

அடுத்து 3-வது விக்கெட் ஜோடியாக ஷேவாக்குடன் வீராட் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் வங்காளதேச பந்துவீச்சை அனைத்து திசைகளிலும் சிதறடித்தனர். ஷேவாக் சிறப்பாக விளையாடி 94 பந்தில் 9 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் சதம் அடித்தார்.

அப்போது இந்தியா 31.2 ஓவரில் 200 ரன்னை தொட்டது. சிறப்பாக விளையாடி வந்த சேவாக் 175 ரன் குவித்து அவுட் ஆனார். அவரது ஸ்கோரில் 5 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகள் அடங்கும்.

அடுத்து யூசுப் பதான் களம் இறங்கினார். மறுமுனைௌயில் விராட் கோஹ்லியும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். கடைசி பந்தில் யூசுப்பதான் அவுட் ஆனார். இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 370 ரன் குவித்தது.

வங்கதேசம் தரப்பில் ஷபியுல் இஸ்லாம், ஷகிப் அல் அஸன், மஹ்மதுல்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

371 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வங்காளதேசம் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம், கெய்ஸ் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை ஸ்ரீசந்த் வீசினார்.

முதல் ஓவரில் 8 ரன் எடுக்கப்பட்டது. இண்டாவது ஓவரை ஜாகீர்கான் வீசினார். இதில் 5 ரன் எடுக்கப்பட்டது. ஸ்ரீசந்த் வீசிய 5 ஓவரில் வங்காளதேசம் 24 ரன் சேர்த்தது. 4.5 ஓவரில் 50 ரன்னை தொட்டது. அணியின் ஸ்கோர் 6.5 ஓவரில் 56 ரன்னாக இருக்கும்போது 34 ரன் எடுத்த கெய்ஸ் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து 2 விக்கெட் ஜோடியாக தமிம் உடன் ஜுனைத் சித்திக்கு சேர்ந்தார்.

இருவரும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். ஜுனைத் சித்திக் 37 ரன்கள் (52 பந்தில் 1 பவுண்டரி 1 சிக்சர்) எடுத்திருந்த நிலையில் ஹர்பஜன் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து களம் இறங்கிய ஷாகிப்,தமிம் இக்பாலுடன் சேர்ந்து சிறப்பாக விளையாடினார். தமிம் 70 ரன்கள் எடுத்திருந்த போது பட்டேல் பந்தில் யுவராஜ் சிங்கால் ஆபாரமாக கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டம் இழந்தார். 3 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களை 32.1 ஒவரில் எடுத்தது.

பின்னர் வந்த வீரர்கள் வரிசையாக அவுட் ஆனதால் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இந்தியா அணி 87 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய பந்து வீச்சாளர்களில் முனாப் படேல் 4 விக்கெட்டுகளையும், ஜாகீர் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பழிக்குப் பழி
Read: In English
2007-ம் ஆண்டு உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியாவை, வங்கதேசம் 5விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து இந்தியா லீக் சுற்றிலேயே வெளியேறும் பரிதாப நிலை ஏற்பட்டது.

2007 தோல்விக்குப் பழிவாங்கும்விதமாக இந்திய வீரர்களின் ஆட்டம் இருந்தது. குறிப்பாக சேவாக்கும், விராட் கோலியும் அதிரடியாக விளையாடியதால், வங்கதேசம் சொந்த மண்ணிலேயே தவிடுபொடியானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *