சென்னை : “கழிவுநீர் குழாய், பாதாள சாக்கடையில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வதை தடுப்பதற்கு சட்டத்திருத்தம் கொண்டு வர, மத்திய அரசை வலியுறுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த நாராயணன் என்பவர் தாக்கல் செய்த கோர்ட் அவமதிப்பு வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, “முதல் பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு, கடந்த மாதம் 4ம் தேதி விசாரணைக்கு வந்தது. கழிவுநீர் குழாய்களில் மனிதர்கள் இறங்கி வேலை செய்வது தொடர்பாக, 1993ல் கொண்டு வந்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள, தமிழக அரசு சட்டம் கொண்டு வர முடிவு செய்திருப்பதாக அரசு பிளீடர் அப்போது தெரிவித்தார்.
அரசு வக்கீல் சிநேகா ஆஜராகி ஒரு கடிதத்தை தாக்கல் செய்தார். ஐகோர்ட் உத்தரவை தீவிரமாக அமல்படுத்துவதற்காக சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என, மத்திய அரசிடம் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்திருப்பதாக, அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்தப் பிரச்னையை மத்திய அரசிடம் தமிழக அரசு கொண்டு செல்ல வேண்டும். அப்போது தான் விரைவில் சட்டத்தில் தேவையான திருத்தங்களை கொண்டு வர முடியும். இந்த கடிதத்தின் நகலை, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரனிடம் அரசு வக்கீல் அளிக்க வேண்டும். அவரும் மத்திய அரசை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, “முதல் பெஞ்ச்’ இடைக்கால உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையை, எட்டு வாரங்களுக்கு, “முதல் பெஞ்ச்’ தள்ளிவைத்துள்ளது.
“பாதாள சாக்கடை, கழிவுநீர் குழாய்களில் மனிதர்கள் இறங்கி கழிவுநீர் அடைப்பை சரி செய்கின்றனர்; இயந்திரங்களை, பாதுகாப்பு சாதனங்களை அவர்கள் பயன்படுத்துவதில்லை; மனிதர்கள் இறங்கி வேலை செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்’ என, சென்னை ஐகோர்ட்டில் நாராயணன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
மனுவை ஐகோர்ட் விசாரித்தது. பாதாள சாக்கடை, கழிவுநீர் குழாய்களில் மனிதர்கள் இறங்கி வேலை செய்வதற்கு தடை விதித்தது. இயந்திரங்களை, பாதுகாப்பு சாதனங்களை கையாள உத்தரவிட்டிருந்தது. அரசுக்கு பரிந்துரைகள் அளிக்க ஒரு குழுவையும் அமைக்க ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, குழுவும் அமைக்கப்பட்டது. “ஐகோர்ட் உத்தரவிட்ட பின்னும், பாதாள சாக்கடையில் இறங்கி பலியாகும் சம்பவங்கள் நடந்துள்ளன; எனவே, அதிகாரிகள் மீது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, மீண்டும் நாராயணன் மனு தாக்கல் செய்தார்.
Leave a Reply