புதிய கட்சி துவக்கினார் புதுச்சேரி மாஜி முதல்வர்

posted in: அரசியல் | 0

புதுச்சேரி : “அகில இந்திய என்.ஆர்., காங்.,’ என்ற புதிய கட்சியை, முன்னாள் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். புதுச்சேரி முதல்வராக பதவி வகித்த ரங்கசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சக அமைச்சர்கள் அணி திரண்டனர்.

இதனால், காங்., தலைமையின் உத்தரவுப்படி 2008ம் ஆண்டில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். காங்., தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்த ரங்கசாமி, இரண்டு ஆண்டுகளாக, காங்., கட்சி விழாக்களில் பங்கேற்காமல் புறக்கணித்து வந்தார். காங்., கட்சியில் இருந்து வெளியேறி, புதிய கட்சி துவங்குவது தொடர்பாக, தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.

இதற்கிடையில், கடந்த 20ம் தேதி தனது எம்.எல்.ஏ., பதவியையும், அகில இந்திய காங்., உறுப்பினர் உள்ளிட்ட கட்சி பதவிகளையும் ரங்கசாமி ராஜினாமா செய்தார். பின், தேர்தல் கமிஷனிடம் புதிய கட்சி துவக்க, கடந்த வாரம் விண்ணப்பித்தார். இதுபோன்ற சூழ்நிலையில், “அகில இந்திய என்.ஆர்., காங்.,’ என்ற புதிய கட்சியை துவங்க உள்ளதாக முன்னாள் முதல்வர் ரங்கசாமி, நேற்று அறிவித்தார். புதிய கட்சியின் நிர்வாகிகளை அறிவித்தார்.

மேலும், கட்சி கொடியையும் அறிமுகப்படுத்தினார். காங்., கட்சியின் மூன்று வண்ணக் கொடியின் நடுவில், மஞ்சள் நிறத்தில் எலுமிச்சை பழமும், சிவப்பு வண்ணத்தில் “என்.ஆர்.’ என்ற ஆங்கில எழுத்துக்களும் கொடியில் இடம் பெற்றுள்ளன.

ரங்கசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: “அகில இந்திய என்.ஆர். காங்.,’ என்ற புதிய கட்சியை துவக்க உள்ளேன். புதிய கட்சியை பதிவு செய்ய தேர்தல் கமிஷனிடம் முறைப்படி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில முன்னேற்றத்துக்காகவும், வளர்ச்சிக்காகவும் நல்ல திட்டங்களை கொண்டு வந்து எங்கள் கட்சி பாடுபடும். அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர பாடுபடுவது எங்கள் கட்சியின் நோக்கம்.

கல்வித்தரத்தை மேம்படுத்தவும், விவசாய உற்பத்தியை பெருக்கவும், தொழிற்கொள்கையை வகுத்து புதிய தொழிற்சாலைகளை கொண்டு வரவும், சுகாதார மேம்பாட்டிற்காகவும் திட்டங்களை கொண்டு வர எங்கள் கட்சி பாடுபடும். இவ்வாறு ரங்கசாமி கூறினார்.

“கட்சியின் பெயரில் உள்ள என்.ஆர்., என்ற எழுத்துக்களுக்கு என்ன அர்த்தம்?’ எனக் கேட்டதற்கு, “நமது ராஜ்யம்’ என்பது அர்த்தம்’ என்று தெரிவித்தார். “காங்., கட்சியினரின் விமர்சனங்களுக்கு உங்கள் பதில் என்ன?’ என்ற கேள்விக்கு, “அதற்கான பதிலை விரைவில் கூறுவேன்’ என்றார். கட்சியின் பொதுச் செயலர் பாலன் உடனிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *