மச்சக்காரர்களுக்கு ஆரோக்கியமான இதயம், கண்கள்: ஆய்வு முடிவு

posted in: உலகம் | 0

லண்டன்: உடம்பில் மச்சம் இருப்பதை சிலர் அதிர்ஷ்டம் என்பார்கள். சிலரோ இது எதுக்குப்பா எக்ஸ்டிரா லக்கேஜ் என்று அலுத்துக் கொள்வர்.


ஆனால் அப்படி அலுத்துக் கொள்ளத் தேவையில்லையாம். மச்சம் இருந்தால் பல மகத்துவங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் ஆராய்ச்சிக் குழு ஒன்று மச்சம் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அது மச்சம் இருப்பவர்களுக்கு மச்சம் இல்லாதவர்களை விட வலுவான எலும்புகள் இருப்பதாகவும், அவர்களுக்கு எலும்புகளைத் தாக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தாக்கும் அபாயம் மிகக் குறைவு என்றும் இந்தக் குழு கண்டுபிடித்துள்ளது.

மேலும் மச்சக்காரர்களுக்கு தோல் சுறுக்கம் குறைவாகத் தான் இருக்குமாம். இது தவிர அவர்களுக்கு இறுக்கமான தசைகளும், ஆரோக்கியமான கண்களும், இதயமும் இருக்கும் என்றும் கண்டுபிடித்துள்ளனர்.

மனித உடலில் உள்ள செல்கள் வேகமாகப் பிரியும்போது தோலில் கருப்பு நிறப் புள்ளி ஏற்படுவது தான் மச்சம் எனப்படுகிறது. இது வழக்கமாக குழந்தைப் பருவத்தில் தான் ஏற்படும். சிலருக்கு மச்சம் நடுத்தர வயதில் மறைந்துவிடும். சிலருக்கு அவை தொடர்ந்து பரவும்.

18 வயது முதல் 79 வயது வரை உள்ள உருவ வேறுபாடுள்ள இரட்டையர் பெண்கள் இந்த ஆராய்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களில் 100 மச்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு 25 மச்சத்தை விடக் குறைவாக உள்ளவர்களை ஒப்பிடுகையில் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தாக்கும் அபாயம் 50 சதவிகிதம் குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரிஸ்பேன், ஆஸ்திரேலியாவிலும் இதே போன்று ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது என்று மரபியல் துறை நிபுணர் பேராசிரியர் டிம் ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.

அப்புறம் என்ன, உடலில் எத்தனை மச்சம் இருக்கிறது என்று எண்ண ஆரம்பிக்க வேண்டியதுதானே…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *