மும்பை : மகாராஷ்டிராவைச் சேர்ந்த வக்கீல், பிரிந்து வாழும் தன் மனைவி மீது, 115 வழக்குகளை பதிவு செய்துள்ளார். மும்பையைச் சேர்ந்தவர் நசிருதீன் நிஜாமுதீன்; வக்கீல்.
இவரது மனைவி கிஷ்வார். கணவர் மீது, முதலில் வரதட்சணை கொடுமை புகார் தெரிவித்த கிஷ்வார், தற்போது விவாகரத்து கோரியுள்ளார். மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக நிஜாமுதீன் தெரிவித்துள்ளார். ஆனால், இவர் கிஷ்வார் மீது 115 அவதூறு வழக்குகளை மும்பை கோர்ட்டில் பதிவு செய்துள்ளார். “ஓயாமல் மனைவி மீது வழக்குகளை பதிவு செய்த நிஜாமுதீன், கோர்ட் நடவடிக்கைகளை இடையூறு செய்வதாக அறிவிக்க வேண்டும்’ எனக் கூறி, மகாராஷ்டிர அரசு வக்கீல் ரவிகதம், மும்பை ஐகோர்ட்டில் புகார் மனு அளித்துள்ளார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மர்லபள்ளி, யு.டி.சால்வி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், “நிஜாமுதீன், மனைவி மீது மட்டும் தான் இது போன்ற தொடர் வழக்குகளை பதிவு செய்துள்ளாரா? வேறெந்த கோர்ட்டிலாவது இது போன்ற இடையூறு தரும் செயல்களை அவர் செய்துள்ளாரா என்பதை அறிந்த பின் தான், அவர் கோர்ட்டை இடையூறு செய்வதாக அறிவிக்க முடியும். இதற்கிடையே அவர் மனைவி விவாகரத்து கோருகிறார். எனவே, இந்த விஷயத்தில், அவர்கள் இருவரும் சுமுகமாக தங்கள் பிரச்னையை தீர்த்துக் கொள்ள வேண்டும். மனைவி மீது அவர் தொடுத்துள்ள வழக்குகளில், 20 மனுக்கள் மட்டுமே பரிசீலிக்கப்பட்டுள்ளன; மற்ற மனுக்கள் நிலுவையில் உள்ளன. எனவே, நிஜாமுதீன் மனைவிக்கு எதிராக வழக்குகளை பதிவு செய்வதை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளனர்.
Leave a Reply