மினி பஸ் வழித்தடங்களை நிர்ணயிக்க அதிகாரம் : எதிர்த்து தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி

posted in: கோர்ட் | 0

சென்னை: மினி பஸ்களுக்கான வழித்தடங்களை நிர்ணயிக்க, போக்குவரத்து அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கியதை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த பஸ் மற்றும் மினி பஸ் உரிமையாளர்கள் தாக்கல் செய்த மனுக்களை, நீதிபதி சந்துரு விசாரித்தார். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், அரசு வக்கீல் ஹெரால்டு சிங் ஆஜராகினர். நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எல்லாம், 2000ம் ஆண்டு ஜூலை மாதம் ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவில் விடையளிக்கப்பட்டுள்ளது. மனுதாரர்கள் எழுப்பிய வாதத்தில் பொருள் இல்லை. ஒருவர் விரும்புகிறாரோ, இல்லையோ, மினி பஸ்கள் இயக்கத்தில் தடை ஏற்பட்டுள்ளது. குடிசைப் பகுதிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளிக்க வேண்டும். இதனால், ஏராளமான பொதுமக்கள் பயனடைவர் என்பது அரசின் நோக்கம். எனவே, இத்திட்டத்துக்கு தடங்கல் ஏற்படுத்தக் கூடாது. தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் கொண்டு வந்தது, அதிக அதிகாரம் வழங்குவதாக ஆகாது. இத்தகைய அதிகாரத்தை வழங்குவதற்கு, அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டே செயல்பட்டுள்ளது. எந்த அரசு போக்குவரத்து கழகங்களும் கோர்ட்டில் வழக்கு தொடுக்கவில்லை. யார் நலனுக்காக இந்த மனுக்களை மனுதாரர்கள் தாக்கல் செய்தனர் என்பது வெளிப்படவில்லை. இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி சந்துரு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் அரசு ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதன்படி, போக்குவரத்துக்கான வழித்தடங்களை நிர்ணயிக்க, போக்குவரத்து அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் 2009ம் ஆண்டு ஒரு திருத்தமும் கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “குறைந்தபட்சம் 100 பேர் வசிக்கும் கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி அளிப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெர்மிட் வழங்கி மினி பஸ்களை இயக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என ஏற்கனவே ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *