வெயில் தாக்கம் காரணமாக, மின் உபயோகம் அதிகரித்ததால், 1,700 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மின்தடை நேரம் நேற்று, மூன்று மணி நேரமாக உயர்ந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் நீர்மின் நிலையங்கள், காற்றாலை, அனல் மின் நிலையங்கள் மூலம், தற்போது 9,100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 1,700 மெகாவாட் மின்சாரம், பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக காற்றாலை மூலம், 600 முதல் 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. காற்று சரியாக வீசாததால், 100 முதல் 200 மெகாவாட் மின்சாரம் மட்டுமே, தற்போது உற்பத்தியாகிறது. மின் பற்றாக்குறையை காரணம் காட்டி, தமிழகம் முழுவதும் 2008 முதல் மின்தடை அமலானது. 2009ல் ஆறரை மணி நேர மின்தடையும், கடந்தாண்டு முதல் இரண்டு மணி நேரம் மின்தடையும், தினமும் அமல்படுத்தப்படுகிறது. கடந்த இரு வாரமாக பகல் நேரத்தில், அளவுக்கு அதிகமாக வெயில் தாக்கம் நிலவுகிறது. இதனால், வீடுகள், அலுவலகங்களில் மின்சாரம் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதேவேளை, காற்றாலை மின் உற்பத்தி அடியோடு குறைந்ததால், நேற்று, மூன்று மணி நேரம் மின்தடை அமல்படுத்தப்பட்டதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சமாளிக்குமா வாரியம்? கடந்த அக்டோபரில், மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, “கோடை காலத்தில் மின் தேவை மேலும், 3,000 மெகாவாட் அதிகரிக்கும். 2011 மார்ச் இறுதிக்குள் மேட்டூரில் 600, எண்ணூரில் 600, வள்ளூரில் 500 மெகாவாட் என புதிய அனல் மின் நிலையங்கள் உற்பத்தி துவங்குவதன் மூலமும், நீர் மின் நிலையங்கள் மூலமும் 2,000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் கிடைக்கும். 1,000 மெகாவாட் மின்சாரம் வெளிமாநிலம் அல்லது மத்திய அரசிடம் இருந்து கொள்முதல் செய்வதன் மூலம், கோடைகாலத்தில் கூடுதலாக தேவைப்படும் 3,000 மெகாவாட் மின்தேவை பூர்த்தி செய்யப்படும்’ என்றார். புதிய அனல் மின் நிலையங்கள் கோடைகாலத்துக்குள் உற்பத்தியை துவங்க சாத்தியங்கள் குறைவாக உள்ளது. தவிர, வெளிமாநிலத்தில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்த காரணத்தால் வாரியத்துக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கோடைகால மின் பற்றாக்குறையை எப்படி சமாளிப்பது என, வாரிய அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், மின்வெட்டு பிரச்னை பூதாகரமாகும் நிலை உருவாகியுள்ளது.
Leave a Reply