மின் பற்றாக்குறை காரணமாக விவசாயத்துக்கு வழங்கும் மின்சாரத்தின் அளவு குறைந்ததாலும், எப்போது மின்சாரம் வரும் என தெரியாததாலும், இரவில் வயல் வரப்புகளில் தூங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.
தமிழகத்தில், 18 லட்சத்து 80 ஆயிரம் விவசாய மின் இணைப்புகள் உள்ளன. விவசாயத்துக்கு அரசு நாள்தோறும், 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கியது.மின் உற்பத்தியை விட தேவை அதிகரித்ததால், இரு ஆண்டாக விவசாயத்துக்கு வழங்கும் மும்முனை மின்சார அளவு நாள்தோறும், 10 மணிநேரமாக குறைக்கப்பட்டது. கோடைகாலம் துவங்கி விட்டதால், தற்போது மின் நுகர்வு மேலும் அதிகரித்துள்ளது. நாள்தோறும் சராசரியாக, 1,700 மெகாவாட் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.பற்றாக்குறையை சமாளிக்க, இரண்டு மணிநேரமாக இருந்த வீடுகளுக்கான மின்தடையை, வாரியம் கடந்த ஒரு வாரமாக மூன்று மணிநேரமாக அதிகரித்துள்ளது. அதுபோல, விவசாயத்துக்கான மின் வினியோக அளவையும் குறைத்து விட்டது. அந்த மின்சாரமும் எப்போது வரும் என தெரியாததால், வழக்கமாக இரவில் வீடுகளில் தூங்கும் விவசாயிகள், மும்முனை மின்சாரத்தை எதிர்பார்த்து வயல்களிலும், வரப்பிலும் காத்திருக்கின்றனர்.
இது குறித்து கொளத்தூரை சேர்ந்த, செல்லியம்மன் உழவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் சுந்தரம் கூறியதாவது:எங்கள் பகுதியில் விவசாய பம்ப் செட்கள் அதிகமாக உள்ளன. விவசாயிகள் மஞ்சள், வாழை போன்ற பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். கடந்த மாதம் வரை தினமும் பகலில், 6 மணி, இரவில் 4 மணி நேரம் மும்முனை மின்சாரம் தொடர்ச்சியாக வழங்கப்பட்டது. அதனால், விவசாயிகள் எளிதாக கிணற்றில் நீர் இறைக்க முடிந்தது.ஆனால், கடந்த ஒரு வாரமாக மும்முனை மின்சாரம் பகலில் சில சமயங்களில் மூன்று மணிநேரம் வினியோகம் செய்யப்படுகிறது. இரவில் எப்போது மும்முனை மின்சாரம் வரும் என்றே தெரியவில்லை. திடீரென ஒரு மணிநேரம் வருகிறது; பின்பு ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் நள்ளிரவிலோ அல்லது அதிகாலையிலோ மின்சாரம் வருகிறது.மும்முனை மின்சாரம் எப்போது வரும் என்பது தெரியாததால் விவசாயிகள் பம்ப் செட் அருகிலும், வரப்பிலுமே இரவு முழுவதும் விழித்து கொண்டிருக்க வேண்டியுள்ளது.இவ்வாறு சுந்தரம் கூறினார்.
Leave a Reply