மீனவர் பிரச்சினை: பிரதமர் நேரடியாக ராஜபக்சேவை எச்சரிக்க வேண்டும்! – ஜெ

posted in: அரசியல் | 0

சென்னை: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களை தடுத்து நிறுத்த, இப்பிரச்னையில் பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாகத் தலையிட வேண்டும்.

இந்தியாவின் கண்டிப்பை நேரடியாக ராஜபக்சேவிடம் தெரிவிக்க வேண்டும், என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இலங்கைக் கடற்படையின் மனிதாபிமானமற்ற தாக்குதல்கள் காரணமாக இதுவரை சுமார் 540 தமிழக மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 15 நாள்களுக்கு முன்பு கூட ஒரு மீனவரின் உயிரை இலங்கை கடற்படை பலிவாங்கியது. அப்போதும் கனிமொழி மெüனமாகத்தான் இருந்தார். இந்நிலையில் இப்போது திடீரென இலங்கை தூதரகத்துக்கு எதிராக கனிமொழி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்.

இது ஒரு கபட நாடகம். ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடி 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக கனிமொழி கைது செய்யப்படுவார் என்று யூகத்தின் அடிப்படையில் தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், மீனவர்கள் நலனில் தி.மு.க.வுக்கு அக்கறை இருப்பதைப் போல காட்டுவதற்காக இந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது குறித்து வெளியுறவுத் துறைச் செயலர் நிருபமா ராவ் மூலம் இலங்கை அரசுக்கு இந்தியா கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. எனினும், ஒரு வார காலத்துக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 16.2.2011 அன்று மீண்டும் இந்திய மீன்பிடி படகுகளை தாக்கி, அதன் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி, 24 மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்து வைத்துள்ளது.

முதல்வர் கருணாநிதியால் அனுப்பப்படும் கடிதங்களை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கண்டு கொள்வதில்லை என்பது வரிசையாக நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போது தெளிவாகிறது.

எனவே, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்தியாவின் கடல் எல்லையை தனது முந்தைய நிலைக்கு எடுத்துவரும் வகையில், இந்திய வரைபடத்தில் கச்சத் தீவை மீண்டும் சேர்க்க வேண்டும். எனவே, இலங்கை அரசுடனான கச்சத்தீவு உடன்படிக்கை ரத்து செய்யப்பட வேண்டும்.

மேலும், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் இந்தியாவின் கடற்படை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட வேண்டும். இந்திய மீனவர்களுக்கு எதிரான தாக்குதல் உடனடியாக நிறுத்தப்படவில்லை என்றால், கடுமையான விளைவுகளை இலங்கை சந்திக்க நேரிடும் என்று இலங்கை அதிபர் ராஜபட்சவிடம் பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசி மூலம் பேசி, நேரடியாக எச்சரிக்க வேண்டும்,” என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *