டெல்லி: முதல்வர் கருணாநிதியை இன்று மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகி வரும் விவகாரம் சமீபத்தில் 2 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டதையடுத்து விஸ்வரூபம் எடுத்தது.
இதையடுத்து நிரூபா ராவ் கொழும்பு விரைந்தார். நேற்று ராஜபக்சேவை சந்தித்து இதுதொடர்பாக பேசினார்.அப்போது தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையால் கொல்லப்படுவது தொடர்பாகவும், தாக்கப்படுவது தொடர்பாகவும் உரிய ஆதாரங்களை ராஜபக்சேவிடம் தெரிவித்தார்.
இதை ஏற்பதாக தெரிவித்த ராஜபக்சே, கூடுதல் ஆதாரங்களை கேட்டுள்ளார். இந்த சந்திப்புக்குப் பின்னர் நிரூபமா ராவ் நேற்று இரவு நாடு திரும்பினார்.
இந்த நிலையில் இன்று காலை முதல்வர் கருணாநிதியை, அவர் தங்கியுள்ள தமிழ்நாடு இல்லத்தில் வைத்து எஸ்.எம்.கிருஷ்ணாவும், நிரூபமாவும் சந்தித்துப் பேசினர்.
அப்போது ராஜபக்சேவுடன் நடந்த சந்திப்பு குறித்து விரிவாக விளக்கினார் நிரூபமா.
இந்த சந்திப்பின்போது மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Leave a Reply