திருவனந்தபுரம் : முல்லை பெரியாறு அணை தொடர்பாக, ஒருங்கிணைப்பு குழு அமைக்க வேண்டும் என, நிபுணர் குழு தெரிவித்த யோசனைக்கு கேரள அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது.
நிபுணர் குழு பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கேரளாவில், ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட முல்லை பெரியாறு அணை, தற்போது மிகவும் பழுதடைந்துவிட்டதால், புதிய அணையை கட்ட வேண்டும் என்கிற முயற்சியில், கேரள அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுத்தும் இம்முயற்சிக்கு, தமிழக அரசு எதிர்த்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த சூழலில், முல்லைப் பெரியாறு அணை நிலவரத்தை ஆராய, சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ஆனந்த் தலைமையில், நிபுணர் குழுவை சுப்ரீம் கோர்ட் அமைத்தது. இக்குழு, முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் நேரில் ஆய்வு நடத்தியது. கேரள அரசு கூறுவது போல், புதிய அணை கட்டுவது தொடர்பாக, மத்திய நீர் ஆணையம், மத்திய மண் ஆய்வு மையம் ஆகியவற்றின் கருத்துக் களையும் கேட்க வேண்டும் என, நிபுணர் குழு யோசனை தெரிவித்தது. நிபுணர் குழு அளித்துள்ள பரிந்துரைகள், கேரள மக்களின் நலனுக்கு எதிராக இருப்பதாக, அம்மாநில நீர் வளத் துறை அமைச்சர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம், சிறப்புக் குழுவின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: மத்திய நீர் ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் தான் முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், சிறப்புக் குழு சார்பில், மத்திய நீர் ஆணையம், மண் வள ஆணையம் ஆகியவை சேர்ந்து ஆய்வு நடத்தும் பட்சத்தில், அது, கேரள மக்களின் நலனுக்கு எதிராகவே இருக்கும். சிறப்புக் குழுவின் தொழில் நுட்ப இயக்குனராக இருக்கும் கோஷ், மத்திய நீர் ஆணையத்தின் இயக்குனராகவும் இருந்துள்ளார். ஒருங்கிணைப்புக் குழுவில், மத்திய நீர் ஆணையத்தின் பிரதிநிதிகள் இடம் பெற்றிருக்க மாட்டார்கள் என, மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்த உறுதி மொழிக்கு எதிராக, ஒரு தலை பட்சமாக ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது, இவ்வாறு பிரேமசந்திரன் கூறினார்.
Leave a Reply