லண்டன் : மருத்துவ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள ரத்தத்தை உறைய வைக்கும் புதிய வகை பேண்டேஜ், விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.
விபத்து மற்றும் எதிர்பாராமல் ஏற்படும் காயங்களால், அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் கூட ஏற்படும். தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பேண்டேஜ்கள் சிறிய காயங்களில் அழுக்கு மற்றும் கிருமிகள் தொற்று ஏற்படாமல் இருக்கும் வகையில், காயங்களை மூடி வைக்கப் பயன்படுகின்றன. இந்த பேண்டேஜ்களால், ரத்தப் போக்கை கட்டுப்படுத்த முடியாது. இந்நிலையில், எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் குழு, புதிய வகை பேண்டேஜை உருவாக்கியுள்ளது. நைலானில் சிறிய அளவில் பிளாஸ்டிக்கை கொண்டும், சில ரசாயனங்களைக் கொண்டும் இந்த பேண்டேஜ் தயாரிக்கப்பட்டுள்ளது.
அடிபட்ட காயத்தின் மீது இந்த பேண்டேஜை போடும் போது, காயத்திலிருந்து வெளியேறும் ரத்தம் உடனடியாக உறைந்து, ரத்தப்போக்கு குறைகிறது. இதன் மூலம், காயம்பட்டவர் உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளும் வரையில், அதிகப்படியான ரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்படுகிறது. போரின் போது, பெரிய அளவில் காயம்படும் படை வீரர்களுக்கு இந்த பேண்டேஜ் மிக பயனுள்ளதாக இருக்கும். நைலானை கொண்டு, பல்வேறு காம்பினேஷன்களில் உருவாக்கிப் பார்த்தனர். இதற்கு 12 மாதங்கள் ஆனது.
இதுகுறித்து, பேண்டேஜை உருவாக்கிய குழுவின் தலைமை விஞ்ஞானி மார்க் பிராண்ட்லி கூறுகையில், “நைலானை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த பேண்டேஜில், சிறிய மருந்துக்கலவை தெளிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்துவதால், ரத்தம் விரைவாக உறைந்து, ரத்த இழப்பை தடுக்க உதவுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.
Leave a Reply