ரத்தன் டாடா கடித விவகாரம் : முதல்வர் மீது ஜெ., குற்றச்சாட்டு

posted in: அரசியல் | 0

சென்னை : “டாடாவின் கடிதத்தை, அவசர அவசரமாக முதல்வர் கருணாநிதி மறுத்திருப்பது, பல புதிய சந்தேகங்களை எழுப்பியுள்ளது’ என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:அரசியல் தரகர் நிரா ராடியா மூலம், கருணாநிதியிடம் நேரடியாக கொடுக்கப்பட்டதாக கூறப்படும் ரத்தன் டாடாவின் கடிதத்தை, அவசர அவசரமாக கருணாநிதி மறுத்திருப்பது, பல புதிய சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இது குறித்து பொருத்தமான, அர்த்தமுள்ள கேள்விகளை நான் எழுப்பிய பின் தான் அதற்கு கருணாநிதி மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.இக்கடிதம் குறித்த செய்தி, ஊடகங்களில் வெளியான போது, அதற்கு கருணாநிதி ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை? இக்கடிதத்தை எழுதிய ரத்தன் டாடா மற்றும் இக்கடிதத்தை நேரடியாக கொடுத்ததாக கூறப்படும் நிரா ராடியா ஏன் இதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை?

இது, இ -மெயில் மூலம் அனுப்பப்பட்ட கடிதம் அல்ல. டாடாவின் மும்பை அலுவலக லெட்டர் பேடில் ரத்தன் டாடாவால் கைப்பட எழுதப்பட்ட கடிதம்.”டாடா டெலி சர்வீசஸ்’ நிறுவனத்தின் துணைத் தலைவர் ராஜிவ் நாராயணன், ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில், ரத்தன் டாடா, கருணாநிதிக்கு எழுதிய கடிதம் பற்றி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.”அப்போதைய மத்திய அமைச்சர் ராஜாவின் கொள்கை அறிவிப்புகளுக்கு உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் தொழிற்துறையில் உள்ள சுயநலவாதக் குழுக்களால் பொது விவாதம் எழுப்பப்பட்ட தருணத்தில் எழுதப்பட்ட கடிதம் இது’ என தெரிவித்து, அக்கடிதத்தில் உள்ள கருத்தை நியாயப்படுத்தி இருக்கிறார்.நிரா ராடியா இதுபோன்ற கடிதத்தை தன்னிடம் அளிக்க வில்லை என, கருணாநிதி தற்போது தெரிவித்து இருக்கிறார்.

டாடாவிடம் இருந்து இதுபோன்ற கடிதத்தை தான் பெற்றதே இல்லை என்றும் கூறியிருக்கிறார்.எனவே, இந்தக் கடிதத்தை முதன்முதலில் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த ஊடகங்கள் மீது கருணாநிதி வழக்கு தொடரப் போகிறாரா? டாடா குழுமத்தின் மூத்த அதிகாரியான ராஜிவ் நாராயணன் பொய் சொல்லியிருக்கிறார் என, கருணாநிதி பகிரங்கமாக அறிவிப்பாரா?இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *