இந்த ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் ரயில் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து என இரண்டிலுமே கட்டண உயர்வு எதுவும் அறிவிக்கப்படவில்லை. ரிசர்வேஷன் கட்டணம் குறைக்கப்பட்டிருக்கிறது.
தவிர, ஏராளமான ரயில் திட்டங்கள் மேற்குவங்கத்துக்கு வாரி வழங்கப்பட்டுள்ளன. தமிழக திட்டங்களுக்கு, வழக்கம் போல சொற்ப நிதியே ஒதுக்கப்படுகிறது.
வரும் 2011-12ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை மத்திய அமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று லோக்சபாவில் தாக்கல் செய்து பேசினார். அந்த பட்ஜெட்டில் பெரும்பாலான திட்டங்கள் அனைத்துமே மேற்குவங்கத்திற்கு என அறிவிக்கப்பட்டிருந்தது. இது எதிர்க்கட்சியினரை கோபம் அடையச் செய்தது. கூச்சல் குழப்பத்திற்கு இடையில் பட்ஜெட்டை அவையில் தாக்கல் செய்தார். முதன்முறையாக, 2010-11ம் ஆண்டில் ரயில்வே துறையின் வருமானம் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும், சரக்குகளை கையாளும் மொத்த திறன் 99.3 கோடி டன் வரை இருக்கும் என்றும், பயணிகள் போக்குவரத்து மூலம் கிடைக்கும் வருமானம் 6.4 சதவீதம் வரை உயரும் என்றும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் ரயில்வே செலவு என்பது ரூ.96 ஆயிரத்து 550 கோடி ஆகும். இது ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி வழங்கிய சம்பளம் மற்றும் நிலுவைத் தொகைகளையும் உள்ளடக்கியது. தவிர, விபத்துக்கள், ஆர்ப்பாட்டம் ஆகியவற்றின் காரணமாக ரயில்கள் சேதாரமாக்கப்பட்டு அதன் மூலம், 1,500 கோடி வரை நஷ்டம் ஆகியுள்ளது. 2010-11ம் ஆண்டில் ரயில்வே திட்டங்களின் முதலீடு என்பது ரூ.40 ஆயிரத்து 315 ஆக மட்டுமே இருந்தது. ஆனால், 2011-12ம் ஆண்டுக்கான திட்டமதிப்பீடு என்று பார்த்தால் ரூ.57 ஆயிரத்து 630 கோடி வரை ரயில்வே திட்டங்களில் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய ரயில் பாதை: இந்த நிதியாண்டில் நாடு முழுவதும், 1,300 கி.மீ., தூரத்திற்கு புதிய ரயில்பாதைகள் அமைக்கப்படும். இதற்கு ரூ.9,583 கோடி செலவிடப்படும். அதேபோல, 867 கி.மீ., வரை இரட்டை ரயில்பாதை அமைக்கப்படும். இதற்கு ரூ.5,406 கோடி செலவிடப்படும். தவிர 1,017 கி.மீ., தூரத்திற்கு அகலப்பாதை மாற்றம் செய்யப்படும். அதற்கு ரூ.2,470 கோடி செலவிடப்படும். ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்வதை தடுப்பதற்கு புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள் வாங்கப்பட்டு அவை, எட்டு மண்டலங்களில் உள்ள ரயில்களில் பொருத்தப்படும். நாடு முழுவதும் உள்ள 236 ரயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவை ஆதர்ஷ் ரயில் நிலையங்கள் என்ற பெயரில், மாதிரி ரயில் நிலையங்களாக ஆக்கப்படும். கேரளாவிலும், மேற்குவங்கத்திலும் பயணிகள் ரயில் போக்குவரத்து டெர்மினல் அமைக்கப்படும். மேற்கு வங்கம், சிங்கூரில் மெட்ரோ ரயில் பெட்டி தொழிற்சாலை அமைக்கப்படும். தவிர, மேற்கு வங்கத்தில் இரண்டு ரயில்வே இன்டஸ்ட்டிரியல் பார்க் அமைக்கப்படும். மணிப்பூரில் டீசல் லோக்கோமோட்டிவ் ரயில் தொழிற்சாலை அமைக்கப்படும். பத்திரிகையாளர்களின் மனைவியர், ஆண்டுக்கு இரண்டு முறை பாதி கட்டணத்தில் சொந்த ஊருக்கு பயணம் செய்யலாம். மாற்றுத் திறனாளிகளுக்கு சதாப்தி ரயிலிலும், ராஜதானி ரயிலிலும் கட்டண சலுகை உண்டு. சென்னை – மும்பை, சென்னை – டில்லி, சென்னை – கோல்கட்டா ஆகியவற்றுக்கு இடையில் தனி சரக்கு ரயில் பாதை திட்டம் அமைக்கப்படும் என்று, லாலு பிரசாத் நான்கு ஆண்டுகளுக்கு முன் அறிவித்திருந்தார். ஆனால், அதுபற்றி இந்த பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை.
மதுரைக்கு “துரந்தோ’: சென்னையில் ஒன்பது புறநகர் மின்சார ரயில்கள் புதிதாக இயக்கப்படும். இதில் முக்கியமானது என்னவெனில் இந்த ரயில்கள் தாம்பரத்தோடு நின்று விடாமல், செங்கல்பட்டு வரை இயக்கப்படும். மதுரைக்கும், சென்னைக்கும் இடையில் ஒரு “துரந்தோ’ ரயில் இயக்கப்படும். இது உட்பட நாடுமுழுவதும் ஒன்பது புதிய “துரந்தோ’ ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும். தவிர நாடு முழுவதும் மூன்று புதிய சதாப்தி ரயில்களும் அறிமுகப்படுத்தப்படும். ரயில் திட்டங்களின் முன்னேற்றங்களை கண்காணிப்பதற்கு என பெங்களூரு, மும்பை, கோல்கட்டா, டில்லி ஆகிய இடங்களில் ரயில்வே கண்காணிப்பு மையங்களும் அமைக்கப்படும். மம்தாவின் மூன்றாவது பட்ஜெட்டான இதில், ஆன்-லைனில் பெறும் டிக்கெட் கட்டணக் குறைப்பும் உண்டு. மே.வங்க தேர்தலை மையமாகக் கொண்ட இந்த பட்ஜெட்டில், வருவாய் ஆதாரம் திரட்ட அதிக வழிகாட்டப்படவில்லை. எதிர்க்கட்சிகள், “பெங்கால் தேர்தல் பட்ஜெட்’ என்று குறை கூறியுள்ளன.
பல முறை கோபம் அடைந்த மம்தா: ரயில்வே பட்ஜெட்டை சமர்ப்பித்த போது, எம்.பி.,க்களின் குறுக்கீட்டால், அமைச்சர் மம்தா பானர்ஜி பல முறை கோபம் அடைந்தார்.
லோக்சபாவில் நேற்று தனது மூன்றாவது ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் மம்தா பானர்ஜி சமர்ப்பித்த போது, மேற்கு வங்க மாநிலத்திற்காக பல திட்டங்களை அறிவித்தார். அப்போது, பீகார், பஞ்சாப் மற்றும் ஆந்திர மாநில எம்.பி.,க்கள் தங்கள் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக குரல் எழுப்பினர்.பீகார் மாநிலத்தை சேர்ந்த ஐக்கிய ஜனதா தள எம்.பி.,க்கள், “கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை என்ன?’ என்று கேள்வி எழுப்பினர். இதனால், கடும் கோபம் கொண்ட மம்தா, “என்ன இது?’ என, ஆவேசமாக கேட்டார். இதேபோல், வேறு ஒரு முறை உறுப்பினர்கள் இடையூறு ஏற்படுத்திய போது, “சத்தம் போடாதீர்கள்’ என்று கூறினார்.மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, அந்த மாநிலத்திற்காக ஏராளமான திட்டங்களை மம்தா அறிவித்துள்ளதாக, சிரோண்மணி அகாலி தளம், தெலுங்கு தேசம் மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் ஒருமித்த குரலில் குற்றம் சாட்டிய போது, கோபம் அடைந்த மம்தா, திடீரென இருக்கையில் அமர்ந்தார்.
பின்னர் தனது திட்டங்கள் குறித்து, அருகிலிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் விவரிக்க முற்பட்டார். அப்போது, பார்லிமென்ட் விவகார அமைச்சர் பவன்குமார் பன்சால் மற்றும் அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் எதிர்க்கட்சி வரிசை பக்கம் சென்று, ஐக்கிய ஜனதா தள எம்.பி.,க்களை சமாதானப்படுத்த முற்பட்டனர்.
* ரயில்வே பட்ஜெட்டை மம்தா வாசித்த போது, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி வரிசையில் எம்.பி.,க்கள் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், உள்துறை அமைச்சர் சிதம்பரம், விவசாய அமைச்சர் சரத் பவார், காங்கிரஸ் எம்.பி., ராஜ்பாப்பர் ஆகியோர் தாமதமாகவே சபைக்கு வந்தனர்.
* மம்தா ரயில்வே பட்ஜெட் உரையை முடிக்கும் முன்னரே, பா.ஜ., எம்.பி., ராஜ்நாத் சிங்கும், அமைச்சர் சிதம்பரமும் சபையை விட்டு வெளியேறினர்.
* சபைக்கு தாமதமாக வந்த ராகுல், காங்கிரஸ் கட்சியின் இளம் எம்.பி.,க்களான சச்சின் பைலன், ஜோதிர் ஆதித்ய சிந்தியா, ஜிதின் பிரசாத், தேபேந்திர சிங் ஹூடா, பிரியா தத், சந்தீப் தீட்சித், மிலிந்த் தியோரா ஆகியோருடன் சபையின் ஒரு மூலையில் அமர்ந்து, ஏதோ ஒரு விஷயத்தை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்.
* கேரள மாநிலம் பாலக்காட்டில் தொழிற்சாலை ஒன்று துவக்கப்படும் என அறிவித்த மம்தா, கேரள எம்.பி., ஒருவரை பார்த்து, “நாங்கள் கேரளாவை நேசிக்கிறோம். அதை உணர்ந்து கொள்ளுங்கள்’ என்றார்.
* ரயில்வே பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டு, சபை ஒத்திவைக்கப்பட்ட உடன், பிரதமர் மன்மோகன் சிங்கும், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் மம்தாவை நோக்கி சென்று, அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
* பட்ஜெட் உரைக்கு பின், மம்தா பானர்ஜியை சந்தித்த பா.ஜ., உட்பட பல கட்சி எம்.பி.,க்கள் தங்கள் தொகுதிகளுக்கான ரயில்கள் பற்றி பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். சோனியாவும் சில எம்.பி.,க்களின் கோரிக்கை பற்றி மம்தாவிடம் சொல்லி, அவற்றை பரிசீலித்து தேவையானதை செய்யும்படி கேட்டுக் கொண்டார்.
42 சதவீதம் ஊழியர் சம்பளம்: ரயில்வே அமைச்சர் மம்தாபானர்ஜி, பார்லி.,யில் நேற்று,ரயில்வேபட்ஜெட்டை சமர்ப்பித்தார். ரயில்வேக்கு ஆகும் செலவை ஒரு ரூபாயில் குறிப்பிடும் போது, ஊழியர்களின் ஊதியம் மற்றும் சலுகைக்காக 42 பைசாவும், ஓய்வூதியத்துக்காக 17 பைசாவும், எரிபொருளுக்காக 16 பைசாவும், தேய்மானத்துக்காக 2 பைசாவும், அரசுக்கு டிவிடென்ட் அளிக்க 6 பைசாவும், உதிரி செலவுக்காக 9 பைசாவும் செலவிடப்படுவதாகவும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சரக்கு போக்குவரத்து மூலம் 65 பைசா வருவாய் கிடைப்பதாகவும், பயணிகள் கட்டணம் மூலம் 26 பைசா வருவாய் கிடைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் நிலக்கரி போக்குவரத்து மூலம் 24 ஆயிரத்து 177 கோடியும், சிமென்ட் போக்குவரத்து மூலம் 5,668 கோடியும், உணவு தானிய போக்குவரத்து மூலம் 4,358 கோடி ரூபாயும், உரம் போக்குவரத்து மூலம் 3,606 கோடியும் பெட்ரோலிய பொருட்கள் மூலம் 3,473 கோடியும், பெட்டகங்களின் மூலம் 3,208 கோடியும் ரயில்வேக்கு வருவாய் கிடைத்தது.
பணவீக்கத்தை குறைக்கும் பட்ஜெட்: மன்மோகன்: “”ரயில்வே பட்ஜெட்டில் சரக்கு கட்டணமும், பயணிகள் கட்டணமும் உயர்த்தப்படாததால், பணவீக்கம் குறையும்,” என, பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று தனது மூன்றாவது ரயில்வே பட்ஜெட்டை சமர்ப்பித்த பின், அதுபற்றி கருத்து தெரிவித்த பிரதமர் மன்மோகன், “இது சாதாரண மக்களுக்கு சாதகமான பட்ஜெட். சரக்கு கட்டணமும், பயணிகள் கட்டணமும் உயர்த்தப்படவில்லை. இதனால், செலவு அதிகரிப்பதால், பணவீக்கம் கூடுவது தடுக்கப்படும். அதே நேரத்தில், உள்கட்டமைப்புத் துறையில் முதலீட்டை அதிகரிக்கவும் மம்தா பானர்ஜி அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுவடையும். மம்தா பானர்ஜி பாராட்டத்தக்க பணியைச் செய்துள்ளார்’ என்றார்.
எதிர்க்கட்சிகளும், தொழில்துறையும் அதிருப்தி: பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலர் ஆனந்த்குமார் நிருபர்களிடம் கூறுகையில், “மேற்குவங்க சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை போல, ரயில்வே பட்ஜெட் உள்ளது. நாட்டின் பிற பகுதிகள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டுள்ளன. ரயில்வே பட்ஜெட் என்றால், பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்யும் வகையிலும், ஒட்டுமொத்த நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும் இருக்க வேண்டும். ஆனால், இந்த பட்ஜெட்டில் அப்படி இல்லை’ என்றார்.
“மக்களை கவரும் வகையிலான சில அறிவிப்புகளைத் தவிர, வியக்கத்தக்க விஷயங்கள் எதுவும் ரயில்வே பட்ஜெட்டில் இல்லை. உண்மையை விட மிகைப்படுத்தப்பட்ட விஷயங்களே அதிக அளவில் உள்ளன. இந்த பட்ஜெட்டால் யாரும் மகிழ்ச்சி அடையவில்லை. தற்போது செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை’ என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜா கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நிலோத்பால் பாசு கூறுகையில், “ரயில்வேயின் நிதி நிலைமை மிக மோசமாக உள்ளதை பட்ஜெட் காட்டுகிறது. சரக்குப் போக்குவரத்தும் குறைந்துள்ளது தெரிகிறது’ என்றார்.
காங்கிரஸ் தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில், “இது சாதாரண மக்களுக்கான பட்ஜெட். எந்தவிதமான கூடுதல் சுமையும் இல்லாமல், மக்கள் பல வசதிகளைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏராளமான திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ரயில்வே நஷ்டத்தில் இயங்குகிறது என்ற கட்டுக்கதைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. ரயில்வேயின் வருவாய் குறையவில்லை’ என்றார்.
காங்கிரஸ் தகவல் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறுகையில், “எந்தவிதமான கட்டணத்தையும் மம்தா பானர்ஜி உயர்த்தவில்லை. அது மிகவும் முக்கியமான அம்சம். சாதாரண மக்களின் தேவை விஷயத்தில் அதிக அக்கறை காட்டப்பட்டுள்ளது. 12வது சம்பள கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தியதால், ரயில்வே அமைச்சகத்திற்கு சிரமம் உருவாகியுள்ளதை மம்தா வெளிப்படையாக கூறியுள்ளார். வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் ரயில்வே, இந்தப் பிரச்னையில் இருந்து வெற்றிகரமாக மீளும்’ என்றார்.
இந்திய தொழில் வர்த்தக சபை சம்மேளனம் கூறுகையில், “பொதுத்துறை – தனியார் துறை பங்களிப்பில் பல திட்டங்களை நிறைவேற்ற முற்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதன்மூலம் ரயில்வேயின் நிதி ஆதாரம் மேம்படுவதோடு, அவற்றை செயல்திட்ட ரீதியான வேறு பல பணிகளுக்கு பயன்படுத்தலாம். அதேநேரத்தில், ரயில்களில் பாதுகாப்பு மற்றும் சுகாதார பிரச்னைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படாதது அதிருப்தி அளிக்கிறது’ என்றார்.
அசோசெம் அமைப்பு கூறுகையில், “ரயில்களில் பயணிக்கும் மக்களின் நலனுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. வர்த்தக துறைக்கு பெரிய அளவில் எதுவும் அறிவிக்கப்படவில்லை’ எனக் கூறியுள்ளது.
Leave a Reply