வரும் தேர்தலில் அம்மா ஆட்சி மலரும்-இது சத்தியம்: ஓ.பன்னீர்செல்வம்

posted in: அரசியல் | 0

சென்னை: வரும் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று புனித ஜார்ஜ கோட்டையில் அதிமுக ஆட்சி மலரும் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.

சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தின் மீது பேசிய அவர்,

அதிமுக ஆட்சியில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. இப்போது மின்வெட்டால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது. காரணம் கேட்டால் அதிமுக ஆட்சியை குறை கூறுகிறீர்கள். 5 ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகும் இதையே சொல்லிக் கொண்டிருப்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள். தமிழகமே இருளில் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது 2 லட்சம் விவசாய பம்புசெட்டுகளுக்கு மின் இணைப்பு தருவதாக கூறுகிறீர்கள். மின் உற்பத்தி அதிகரிக்கவில்லை. மத்திய மின்தொகுப்பில் இருந்து மின்சாரத்தை பெறுவதற்கு முயற்சி செய்யவில்லை. இப்படி இருக்கும்போது பம்புசெட்டுகளுக்கு மின் இணைப்பு வழங்குவது எப்படி சாத்தியமாகும்?

விலைவாசி விண்ணை எட்டியுள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த இந்த அரசு தவறிவிட்டது. விவசாய விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. காய்கறி முதல் கட்டுமான பொருட்கள் வரை விலைவாசிகள் அனைத்தும் உயர்ந்துள்ளன.

ஒரு வெங்காயத்தை 4 ஆக வெட்டி, காலைக்கு ஒன்றும், மதியம் குழம்பு வைக்க ஒன்றும் வைத்துக் கொண்டு, மீதியுள்ள இரண்டு துண்டுகளை அடுத்த நாளைக்கு வைத்துக் கொள்ளும் நிலைதான் உள்ளது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது குறித்து இடைக்கால பட்ஜெட்டில் எந்த குறிப்பும் இல்லை.

விலைவாசி உயர்ந்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. தண்டபாணி தெரிவித்தார். விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைத்தால் மகிழ்ச்சி அடையலாம். ஆனால், உற்பத்தியாகும் இடத்தில் பொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இடைத் தரகர்கள்தான் பயனடைகின்றனர்.

காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு ஆகியவற்றில் இருந்து நீரை பெறுவதில் இந்த அரசு ஜீவாதார உரிமைகளை பறிகொடுத்துக் கொண்டிருக்கிறது. மாதேஸ்வரன் மலைப்பகுதி குடிநீர் திட்டத்திற்காக கர்நாடக அரசு மேட்டூர் அணை நீர்பரப்புப் பகுதியில் இருந்து தண்ணீர் எடுக்கிறது என்றும், குடிநீருக்காக தண்ணீர் எடுக்க காவிரி நடுவர் மன்றம் அனுமதி அளித்துள்ளதால், குடிநீருக்காக கர்நாடக அரசு தண்ணீர் எடுப்பதை நாம் எதிர்க்க முடியாது என்றும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

கர்நாடக அரசு தமிழகத்திற்கு தரும் தண்ணீரின் அளவு பில்லிகுண்டு என்ற இடத்தில் அளக்கப்படுகிறது. நமது உரிமையாக இந்த இடத்திற்குள் வந்து சேர்ந்த பிறகு அதில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் எடுப்பது எப்படி அவர்கள் உரிமை ஆகும்? இது எப்படி நியாயம் ஆகும்? ஓகேனக்கலில் நமக்கு வழங்கப்பட்ட தண்ணீரில் இருந்துதான் குடிநீருக்காக தண்ணீர் எடுக்கிறோம்.

அமைச்சர் பொன்முடி: தலைவர் கலைஞர் காவிரி ஆற்றோடு பிறந்தவர். காவிரி பிரச்சனையில் நிச்சயமாக நமது உரிமையை விட்டுத்தர மாட்டோம்.

பன்னீர்செல்வம்: முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்கு தேவையான பொருட்களை கேரள அரசு கொண்டு போய் சேர்த்துக் கொண்டிருக்கிறது. கேரளத்தில் மணல் எடுக்க கடுமையான தடை விதிக்கப்பட்டு உள்ளதால், புதிய அணை கட்டுவதற்கு தேவையான மணல் தமிழ்நாட்டில் இருந்து எடுத்து செல்லப்படுவதுதான் கொடுமையிலும் கொடுமை. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பை மத்திய அரசுதான் அமல்படுத்த வேண்டும்.

அமைச்சர் பொன்முடி: எதிர்க்கட்சி துணைத் தலைவர் அரசியல் உள்நோக்கத்துடன் பேசுகிறார். புதிய அணை கட்டுவதை தடுக்க சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளோம். புதிய அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

பன்னீர்செல்வம்: நிலமற்ற ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கும் திட்டம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. நிலங்களைக் கண்டறிந்து ஏழைகளுக்கு பிரித்துக் கொடுக்குமாறு அரசை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். ஒரே குடும்பத்தில் பலருக்கும், ஏற்கெனவே பட்டா பெற்றவர்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. நிலம் இருப்பவர்களுக்கே நிலம் கொடுத்திருக்கிறீர்கள்.

அமைச்சர் ஐ.பெரியசாமி: ஆதாரத்துடன் புகார் கொடுத்தால் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது. இந்த விவகாரத்தில் எதிர்கட்சியினரின் சவாலை சந்திக்க தயாராக உள்ளோம். துளிகூட முறைகேடு நடக்கவில்லை. ஆதாரத்துடன் நிரூபித்தால் அரசியலைவிட்டு விலகத்தயாராக இருக்கிறேன்.

பன்னீர்செல்வம்: வரி இல்லாத இடைக்கால நிதிநிலை அறிக்கை என்கிறீர்கள். ஆனால், நிதித் துறை செயலாளர் செய்தியாளர்களிடம் பேசும்போது, பெட்ரோலியப் பொருள்களின் மீது விதிக்கப்படும் வரிகளின் மூலமும், வரி வசூலில் காட்டிய அக்கறையின் மூலமும் அரசின் வருவாய் அதிகரித்திருப்பதாகக் கூறியுள்ளார். பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை 9 முறை உயர்ந்துள்ளது. ஆனால், மாநில அரசு விதிக்கும் விற்பனை வரி குறைக்கப்படவில்லை. அதாவது மறைமுகமாக மக்களிடம் வரியை வசூலிக்கிறார்கள். ஆனால், வரி இல்லாத நிதிநிலை அறிக்கை என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.

தமிழக அரசுக்கு ரூ. 1 லட்சம் கோடி கடன் சுமை இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடன் வாங்கி கட்டுமானப் பணிகள் போன்ற மூலதனச் செலவுகளை செய்ததாக நிதி அமைச்சர் கூறுகிறார். வரி வருவாயை ஆடம்பரச் செலவுகளுக்கு பயன்படுத்தி கடன் வாங்கி மூலதனச் செலவுகள் செய்வதை எப்படி ஏற்க முடியும்? இலவச கலர் டிவி வழங்க சுமார் ரூ. 4 ஆயிரம் கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. இது என்ன சமூக பாதுகாப்புத் திட்டமா?

ரூ. 1 லட்சம் கோடிக்கும் அதிகமாக கடன் வாங்கியதன் மூலம் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தனி மனிதனையும் கடன்காரனாக்கி விட்டது இந்த அரசு. கடன் வாங்கியதுதான் கடந்த 5 ஆண்டுகளில் நீங்கள் செய்த சாதனை. ரூ. 1 லட்சம் கோடி கடன் பற்றி கேட்டால் கடன்தான் தமிழகத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்று அனுபவம் வாயந்த நிதி அமைச்சர் அன்பழகன் கூறுகிறார். இது சரியா?

அதிமுக ஆட்சியில் நிர்வாகத்தில் நேர்மை இருந்தது. உங்கள் ஆட்சியில் நிர்வாகம் சீர்குலைந்துவிட்டது. எல்லா வழிகளிலும் மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். எப்போதுமே ஏமாற்றம்தான் புதிய மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்பார்கள். உங்கள் ஆட்சியில் 5 ஆண்டுகள் ஏமாற்றத்தை சந்தித்துள்ள மக்கள் வரும் தேர்தலில் மாற்றத்தை கொண்டு வரப்போகிறார்கள்.

மக்கள் சக்தியின் துணையோடு அம்மா மீண்டும் ஆட்சிபீடம் ஏறுவார்கள். வரும் தேர்தலில் அம்மா ஆட்சி மலரும். இது சத்தியம். அம்மா ஆட்சி வர வேண்டும் என்று மக்கள் ஏங்கத் தொடங்கி விட்டனர். தேர்தலுக்கு பிறகு நீங்கள் எதிர்க்கட்சி வரிசையிலும், நாங்கள் ஆளுங்கட்சி வரிசையிலும் இருப்போம். புனித ஜார்ஜ் கோட்டையில் மீண்டும் சந்திப்போம். (அதாவது புதிய சட்டசபைக்குள் ஜெயலலிதா காலே வைக்க மாட்டாராம்..)

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *