விடுதலை புலிகளுக்கு ஆதரவான வைகோ மனு ஏற்பு: சென்னை உயர்நீதிமன்றம்

posted in: அரசியல் | 0

சென்னை: விடுதலைப் புலிகள் மீது மத்திய அரசு விதித்த தடையை உறுதி செய்த தீர்ப்பு ஆயத்தின் ஆணையை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ தாக்கல் செய்த ரிட் மனு விசாகரணைக்கு ஏற்கப்பட்டது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு வைகோ ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை ஏற்பதா? என்பது குறித்து, உயர்நீதிமன்றத்தில் 10.2.2011 விசாரணை நடைபெற்றது. தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அமர்வுக்கு முன்னர் விசாரணை நடைபெற்றது.

விசாரணையில் வைகோ நேரில் ஆஜராகி வாதாடினார். அவர் கூறியதாவது:

விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தடை செய்து உள்ள இந்திய அரசின் ஆணையில், விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள், அனுதாபிகளை ஒரு காரணமாகக் காட்டப்பட்டுள்ளது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்பாடுகளையும், என்னுடைய மேடைப் பேச்சுக்களையும், இந்தத் தடைக்கான காரணங்களுள் ஒன்றாகக் கூறியுள்ளனர் அரசுத் தரப்பில். எனவே, இந்த வழக்கைத் தொடுப்பதற்கு எனக்கு, சட்டப்படித் தகுதி உண்டு.

என்னுடைய ரிட் மனுவுக்குப் பதில் அளிக்கும் விதமாக இந்திய அரசு தாக்கல் செய்து உள்ள மனுவில், என்னுடைய நடவடிக்கைகளும், தடைக்கான ஒன்றாகக் காட்டப்பட்டு உள்ளது.

தீர்ப்பாயத்தின் தலைவரான நீதிபதி, தன்னுடைய ஆணையில், 1 முதல் 7 வரையிலான அரசுத் தரப்புச் சாட்சிகளின் சாட்சியத்தின் அடிப்படையில், விடுதலைப்புலிகள் மீதான தடை உறுதி செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார்.

அரசுத் தரப்புச் சாட்சிகள் அனைவரும், தமிழ்நாட்டில் நடைபெற்ற சம்பவங்களையே, தடைக்கு ஆதரவாகத் தந்து உள்ளனர். எனவே, இதுகுறித்து விசாரிப்பதற்கு, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு முழு உரிமையும் உண்டு. இந்த நீதிமன்றம் விசாரிக்க உரிமை இல்லை என்று அரசுத்தரப்பு சொல்வதை ஏற்க முடியாது.

சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்ய தீர்ப்பாயம் எனக்கு அனுமதி வழங்கியதாகவும், ஆனால், தடைக்கு எதிரான எந்த ஆதாரத்தையும் நான் காட்ட முடியவில்லை என்றும் அரசு கூறுகிறது. தமிழக அரசின் காவல் துறையினர், புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பாளர்தான் முதல் சாட்சி ஆவார்.

அரசுத்தரப்பில் தந்த ஆவணங்கள், தகவல்கள் எதையும் நான் பார்வையிடுவதற்கோ, அறிந்து கொள்வதற்கோ எனக்கு வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை.

மிக முக்கியமாக, இந்த நீதிமன்றத்துக்கு நான் தெரிவிப்பது என்னவென்றால், விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் 10 (அ)(1) பிரிவின் கீழ் ஒருவர் மீது கூட வழக்குப் பதிவு செய்யவில்லை.

தீர்ப்பே தவறானது…

புலிகள் தடை மீதான தீர்ப்பாயத்தில், சிவில் நடைமுறைச் சட்ட விதிகளின்படி எனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதை, தீர்ப்பு ஆயத்தின் நீதிபதி ஏற்றுக்கொள்ளாமல், ‘சிவில் நடைமுறைச் சட்டம் இதில் பொருந்தாது’ என்று, கூறி உள்ளார். சட்டப்படி அந்தத் தீர்ப்பே தவறானது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் நான் இல்லாததால், எனக்கு இதிலே வழக்குத் தொடுக்க உரிமை இல்லை என்று கூறி உள்ள மத்திய அரசு, அதற்கு நேர்முரணாக, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 6 உட்பிரிவு 2 ன் கீழ், தடையை நீக்குவது குறித்து இந்திய அரசை அணுகலாம் என்று, மைய அரசு தன் பிரமாண வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளது.

எனவே, தடை விதித்து இருக்கின்ற மத்திய அரசிடம் போய் நான் மன்றாட மாட்டேன்.

இதுகுறித்து விசாரித்து, தடையை நீக்கி நீதி வழங்க வேண்டும் என்பதற்காகத்தான், நான் இந்த நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து உள்ளேன், என்றார்.

விசாரணைக்கு ஏற்பு:

ஏற்கனவே இதுகுறித்த ரிட் மனு தாக்கல் செய்து உள்ள புகழேந்தி சார்பாக ஆஜரான வழக்கறிஞர் இராதாகிருஷ்ணன், ‘வைகோ அவர்கள் முதலில் வாதம் செய்யட்டும்’ என்று கூறியபோது, தலைமை நீதிபதி, ‘இருவரும் ஒரே கருத்தைத்தானே கொண்டு இருக்கிறீர்கள். வைகோ சொல்வதில் ஏதாவது விடுபட்டு இருந்தால் நீங்கள் சொல்லலாம்’ என்றார்.

பின்னர் வைகோ, இன்னும் அதிகமான, கருத்துகளை, விவரங்களை இந்த நீதிமன்றத்தில் முன் வைக்க வேண்டி உள்ளது’ என்றார்.

இதையடுத்து நீதிபதி, அப்படியானால் இந்த ரிட் மனு அனுமதிக்கப்படுகிறது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதிக்கிறோம்; ஏப்ரல் 25 ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *