சென்னை : தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு டிபாசிட் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசு, தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மாங்குண்டு பகுதியைச் சேர்ந்த முருகேந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனுவை, நீதிபதி ஜோதிமணி விசாரித்தார். மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, மத்திய அரசு மற்றும் தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
முருகேந்திரன் தாக்கல் செய்த மனு: மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில், 2009ம் ஆண்டு மத்திய அரசு ஒரு திருத்தம் கொண்டு வந்தது. லோக்சபா தொகுதிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கட்டணத்தை 10 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 12 ஆயிரத்து 500 ரூபாய் எனவும், சட்டசபை தொகுதிகளுக்கு கட்டணம் 5,000ல் இருந்து 10 ஆயிரமாகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 5,000 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டது. வேட்பாளர்களுக்கான டிபாசிட் கட்டணத்தை உயர்த்தியிருப்பது, அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையை மீறுவதாக உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தமானது, அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. வசதிபடைத்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த திருத்தம் உள்ளது. இதனால், இளைஞர்கள், மக்கள் நம்பிக்கை இழப்பர். அனைத்து தரப்பு மக்களும் தேர்தல் நடவடிக்கையில் கலந்து கொள்ளும் வகையில், மிக குறைந்த அளவு டிபாசிட் கட்டணமே இருந்தது. கல்வித் தகுதியும் கிடையாது. இதனால், தேர்தலில் போட்டியிட பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என கருதப்பட்டது. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள திருத்தம் சரியல்ல. 20 சதவீதத்துக்கும் மேல் வறுமைக்கோட்டு எல்லையில் உள்ளனர். இந்த சட்டத் திருத்தத்தினால், வரும் தேர்தலில் என்னால் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு, தேர்தல் கமிஷனுக்கு கடந்த ஏப்ரல் மாதம் மனு அனுப்பினேன். எந்த பதிலும் இல்லை. எனவே, டிபாசிட் கட்டணத்தை உயர்த்தி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் கொண்டு வந்த திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய கட்டணத்தை வசூலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது
Leave a Reply