“ஸ்பெக்ட்ரம்’ வழக்கில் கருணாநிதி, குடும்பத்தினரை சேர்க்க வேண்டும்: ஜெ., வலியுறுத்தல்

posted in: அரசியல் | 0

சென்னை : “கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும், “ஸ்பெக்ட்ரம்’ ஊழலில் குற்றவாளிகளாக சேர்க்கப்படுவதற்கு தகுதியானவர்கள்’ என, ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்த அவரது அறிக்கை: முதல்வர் கருணாநிதி ஒரு விஷயத்தில் பாராட்டு பெற தகுதியுடையவர். “விஞ்ஞான பூர்வமான ஊழல்’ என வருகிற போது, கடந்த 69ல், முதன் முறையாக முதல்வர் பதவி ஏற்றதில் இருந்து, இன்று வரை அனைவரும் வியக்கும் வகையில் ஒரே மாதிரியான கொள்கையை கடைபிடித்து வருகிறார். சர்க்காரியா விசாரணை கமிஷன் அறிக்கையின் முதல் தொகுப்பில், பக்கம் 52, 53ல் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி, அவரது தாய் சிவபாக்கியம், பாதுகாவலர் கபாலி ஆகியோர், “கதவு எண் 9, முதல் குறுக்கு தெரு, ராஜாஅண்ணாமலைபுரம், சென்னை’ என்ற முகவரியை கொண்ட வீட்டை, விஸ்வாசம் என்பவரிடம் இருந்து வாங்கியது முதல், அதை எப்படி எல்லாம் மாற்றி, மாற்றி கணக்கு காட்டியிருக்கின்றனர் என்பது குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், ராஜாத்திக்கு கடன் கொடுப்பதற்காக, ராஜாத்தியின் தாயாரிடம் இருந்து பணம் வாங்கியதாக, ராஜாத்தியின் பாதுகாவலர் கபாலி குறிப்பிட்டு இருப்பதும் உள்ளது. இது தொடர்பாக, நீதிபதி சர்க்காரியா மீது அனுதாபப்படத்தான் முடியும். 28 குற்றச்சாட்டுகளில் இது போன்ற குழப்பமான புள்ளி விவரங்களை அலசி ஆராய வேண்டிய நிலை நீதிபதிக்கு ஏற்பட்டது. எனவே, “விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்வதில் வல்லவர்’ என, கருணாநிதிக்கு நீதிபதி சர்க்காரியா சான்றிதழ் கொடுத்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

“ஸ்பெக்ட்ரம்’ இமாலய ஊழல் விசாரணையிலும் இதே போன்ற விஞ்ஞான பூர்வமான ஊழல்கள் தான் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மும்பை கட்டுமானத்துறையைச் சேர்ந்த, “டைனமிக்ஸ் பல்வா’ என்ற நிறுவனத்தால், புதிதாக தொடங்கப்பட்ட, “ஸ்வான் டெலிகாம்’ நிறுவனத்திற்கு, “ஸ்பெக்ட்ரம்’ ஒதுக்கீட்டை, அடிமாட்டு விலையான, 1,537 கோடி ரூபாய்க்கு ராஜா அளித்தார். இதற்கு பின், “டைனமிக்ஸ் பல்வா’ நிறுவனம், தன் 45 சதவீத பங்குகளை, அரபு எமிரேட் நாட்டைச் சேர்ந்த, “எடிசலாட்’ நிறுவனத்திற்கு, 4,200 கோடி ரூபாய்க்கு விற்றது. கருணாநிதிக்கு மறைமுகமாக லஞ்சம் கொடுத்தார்: இதற்காக, “டைனமிக்ஸ் பல்வா’ அதிபர் பல்வா, வருமான வரித்துறையின் பார்வையில் இருந்து தப்புவதற்காக, தன் கட்டுப்பாட்டில் வரும், 11 நிறுவனங்களில் இருந்து, 25 லட்சம் முதல், 100 கோடி ரூபாய் வரை மொத்தம் 209.25 கோடி ரூபாயை, ஆசிப் பல்வா மற்றும் ராஜிவ் அகர்வால் ஆகியோருக்கு சொந்தமான, “குசேகான் ப்ரூட்ஸ்’ மற்றும் “வெஜிடபிள்ஸ்’ என்ற நிறுவனத்திற்கு மாற்றியிருக்கிறார்.

“குசேகான்’ நிறுவனம், இதில் இருந்து, 206.25 கோடி ரூபாயை, பல்வா மற்றும் மொரானிக்கு சொந்தமான, “சினியுக் பிலிம்ஸ்’ நிறுவனத்திற்கு கொடுத்திருக்கிறது. இந்நிறுவனம், 2009 -10ம் ஆண்டு, கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் கனிமொழி ஆகியோர், 80 சத பங்குகளை பெற்றுள்ள, “கலைஞர் டிவி’க்கு உத்தரவாதமற்ற கடனாக, 206 கோடி ரூபாயை கொடுத்து இருப்பது தெரிய வருகிறது. சர்க்காரியா கமிஷன் குறிப்பிட்டுள்ள பணப் பரிமாற்றமும், “கலைஞர் டிவி’ பண பரிவர்த்தனையும் ஒத்திருக்கிறது. அதே குழப்பமான கணக்கு முறை. பணம் எங்கிருந்து வருகிறது என்பதை கண்டறிய முடியாத அளவிற்கு நேர்மையற்ற முறை. எனவே, கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும், “ஸ்பெக்ட்ரம்’ இமாலய ஊழலில், குற்றவாளிகளாக சேர்க்கப்படுவதற்கு தகுதியானவர்கள். இதை செய்தால் மட்டுமே அனைத்து உண்மைகளும் வெளிவரும்; நீதி நிலைநாட்டப்படும். இவ்வாறு ஜெயலலிதா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *