ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா நேற்று மதியம் கைது செய்யப்பட்டார். அவருடன் தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெஹீரோ, ராசாவின் தனிச் செயலாளர் ஆர்.கே.சந்தோலியா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து 15 மாதங்களுக்கு முன்பே சி.பி.ஐ. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போதிலும் தற்போது தான் முதன் முதலாக கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று கைதான ராசா உள்ளிட்ட 3 பேர் மீதும் 8 நிறுவனங்களுக்கு விதிகளை மீறி 2ஜி அலைகற்றைகளை ஒதுக்கீடு செய்ததாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது. மேலும் ஆ.ராசாவின் வீடு, அலுவலகங்களில் நடந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், விசாரணை தகவல்களையும் கைது நடவடிக்கைக்கு ஆதாரமாக சி.பி.ஐ. கூறியுள்ளது. இவை தவிர குற்றம் சாட்டப்பட்டவர்களின் பணப் பறிமாற்றமும் முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது.
மேலும் அப்ரூவராக மாறி உள்ள ஒருவர் கொடுத்துள்ள வாக்குமூலம், ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை வெளிப்படுத்தும் மிக முக்கிய ஆதாரமான சி.பி.ஐ. வசம் உள்ளது. இதனால் தான் ஆ.ராசா உள்ளிட்ட மூவரை சி.பி.ஐ. அதிரடியாக கைது செய்ததாக தெரிய வந்துள்ளது. கைதான மூவரும் நேற்றிரவு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் படுத்துத் தூங்கினார்கள். அவர்களுக்கு அதிகாரிகள் இரவு உணவு கொடுத்தனர்.
இன்று (வியாழன்) காலை ஆ.ராசா, சித்தார்த்த பெகுரா, சந்தோலியா ஆகிய மூவருக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள் காலை உணவு வழங்கினார்கள். அதன் பிறகு மூவரையும் டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றமான பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் ஆஜர் படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
இன்று மதியம் ராசா உள்ளிட்ட மூவரும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். அப்போது சி.பி.ஐ. அதிகாரிகள், புதிய மனு ஒன்றை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். ராசா உள்ளிட்ட மூவரிடமும் விரிவான விசாரணை நடத்த வேண்டியது இருப்பதால் மூவரையும் காவலில் அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க உள்ளனர். அந்த கோரிக்கையை ஏற்று ராசா சி.பி.ஐ. காவலில் அனுப்பப்படுவாரா என்பது இன்று பிற்பகல் தெரிய வரும்.
இதற்கிடையே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக விரிவான விசாரணையை சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரப் படுத்தி உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு விசாரணை வரும் 10-ந் தேதி (வியாழன்) வர உள்ளது. அன்று சி.பி.ஐ. அதிகாரிகள், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர். அதற்கு இன்னும் ஒரு வாரமே கால அவகாசம் உள்ளது.
இதனால் சி.பி.ஐ. தனது விசாரணையை தீவிரப் படுத்தி உள்ளது. இந்த நிலையில் ஸ்பெக்ட்ரம் தொடர்பாக தனியாக விசாரணை நடத்தி வரும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுக்கு, சி.பி.ஐ. நேற்று திடீரென அழைப்பு விடுத்தது. கைது செய்யப்பட்டுள்ள ராசா உள்ளிட்ட 3 பேரிடமும் ஒருங்கிணைந்து விசாரணை நடத்தலாம் என்று சி.பி.ஐ. கூறியுள்ளது.
இதை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர். இதனால் இனி அடுத்தக்கட்ட விசாரணை நடக்கும் போது சி.பி.ஐ. அதிகாரிகளும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் ஒன்றாக இருந்து விசாரணை நடத்துவார்கள்.இதன் காரணமாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
Leave a Reply